Wednesday, September 10, 2025

புறாக்கிராம்

 நாங்கள் புறாக்கிராமத்திலிருந்து பேசுகிறோம் என்ற குரலை கேட்டதுமே நான் மகிழ்ச்சியடைந்தேன்.

நாகூர் தர்காவிலுள்ள மிக உயரமான (131) அடி மினாராவை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) கட்டினார். அவருக்கு பின்னர் தஞ்சையை ஆண்ட மன்னர் நாகூர் தர்காவின் மினாராக்களில் குடியிருக்கிற புறாக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு ஊரை மானியமாக வழங்கினார். அந்த ஊரின் பெயர் தான் புறாக்கிராமம்.
தர்காக்கள் மத நல்லிணக்கத்திற்கு எப்படி எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன் என்பதற்கு அடையாளமாக பல சொற்பொழிவுகளிலும் புறாக்கிரமத்தை எடுத்துக் கூறியிருந்த எனக்கு அந்த ஊரிலிருந்து முதல் முறையாக ஒரு அழைப்பு என்றால் மகிழ்ச்சி வராதா ?
ஆர்வத்தேடு நேற்று அந்த கிராமத்திற்கு சென்ற போது அங்கிருந்த கம்பீரமான பள்ளிவாசலும் அதை சுற்றி அழகுற அமைந்திருந்த ஊரும் இன்னும் அதிக மகிழ்ச்சியை அளித்தன. பள்ளிவாசல் நிர்வாகிகளின் அன்பும் அரவணைப்பும் மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது.
புறாக்கிரமத்தின் வரலாற்றை பள்ளிவாசல் நிர்வாகிகளோடு பகிர்ந்து கொண்ட போது நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த பள்ளிவாசல் பற்றி கல்வெட்டு ஏதும் உண்டா என்று கேட்டேன் ஓடிப்போய் பள்ளிவாசலின் முற்றத்திலிருந்து ஒரு கல்வெட்டை போட்டோ எடுத்து வந்தார்கள். “1888 ம் ஆண்டு முஹம்மது அபூபக்கர் ராவுத்தர் அவர்கள் தர்மகர்த்தாவாக இருந்து இவ்விடத்தில் கட்டப்பட்ட முஹ்யித்தீன் பள்ளிவாசல் மிக சிறியதாகவும் பழையதாகவும் இருந்ததை இடித்து விட்டு 1987 புதுப்பித்து கட்டப்பட்ட பள்ளிவாசல்” என்ற தெளிவான விளக்கம் அதில் இருந்தது. எனவே பள்ளிவாசல் இப்போதைக்கு புதிதாக தெரிந்தாலும் அதன் பூர்விகம் தொன்மையானது என்பது புரிந்தது.
மராத்திய மன்னர்களின் வரலாற்று தேதிகளோடு இந்த தேதி ஒத்துப் போவதை சுட்டி காட்டி பள்ளிவாசலின் வரலாற்றை ஒரு அழகிய செய்திக் குறிப்பாக பள்ளிவாசலுக்கு முன் எழுதி வைக்குமாறு கூறினேன்.
பாரம்பரியத்தை பாதுகாக்க தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக நிர்வாக சபை தலைவர் நாஸர் அவர்களும் செயலாளர் ரஷீத் அவர்களும் கூறினர். 1945 லிருந்து பழைய திருமண பதிவேடுகள் கிடைத்திருப்பதாகவும் சிதிலமடைந்துள்ள அவற்றை பிரதி எடுத்து பாதுகாக்க முயற்சித்துவருவதாகவும் கூறினர். ஒரு சின்ன குறிப்பை கூட தவறவிட வேண்டாம் என்று சொல்லி இப்போதைக்கு டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பது அதாவது போட்டோ இமேஜ் அல்லது ஸ்கேன் வடிவத்தில் ஒரு SSD ஹார்d டிஸ்கில் பதிவு செய்வது ஜெராக்ஸ் பிரதி எடுத்து பாதுகாப்பதை விட சிறந்ததும் எளிமையானதுமாகும் என்று கூறினேன். இன்ஷா அல்லாஹ் கவனிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
புறாக்கிரமத்திற்கு அருகில் இருக்கிற திட்டச்சேரியில் இப்போதிருக்கிற பள்ளிவாசலே கூட பழமையானது. அது அந்த ஊர் மக்களே சொந்தமாக உடல் உழைப்பை கொடுத்து கட்டிய பள்ளிவாசல் என்ற செய்தியை பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்திருப்பது என் நினைவில் இருக்கிறது
இது போன்ற பழைய வரலாற்று பாரம்பரியம் உடைய பள்ளிவாசல்களில் தொல் பொருள் நினைவுச் சின்ன்ங்களுக்கு முன்புறம் வைக்கப்படுவது போல – ஒரு எடுப்பான தகவல் பலகை வைக்கப்படுமானால் அடுத்த தலைமுறைக்கும் நாட்டு மக்களுக்கும் நமது வரலாற்றை எடுத்துச் சொல்ல உதவியாக இருக்கும்.
சவூதி அரேபிய அரசு பல தலைமுறைகளை நாசம் செய்த பிறகு இப்போது வரலாற்று அடையாளங்களை பாதுகாப்பதன் அரூமையை உணர்ந்து, தொன்மை சின்னங்களுக்கு முன் தகவல் கல்வெட்டுக்களை வைத்து வருகிறது. குபா பள்ளிவாசலுக்கு பக்கத்தில் வைக்கப் பட்டுள்ள ஒரு கல்வெட்டில் அதன் அருகே எந்தெந்த நபித்தோழர்களின் வீடு இருந்தது என்பதை பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைத்த கல்வெட்டை இப்போது காணலாம்.
புறாக்கிரமத்தில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சி இன்றைய காலை தினசரியில் வெளிவந்திருப்பது அங்குள்ள நிர்வாகத்தின் சுறுசுறுப்பிற்கு சாட்சி.
Good. Keep it up.
நல்லோருடனான எந்த ஒரு சிறு தொடர்பும் வரலாற்றை கடந்து மணம் வீசக் கூடியது என்பதற்கு புறாக்கிரமாம் தந்த மகிழ்ச்சியும் ஒரு அடையாளம். அல்ஹம்துலில்லாஹ்.
(புறாக்கிராமம் நாகூரிலிருந்து சுமார் 15 கீமி தொலைவிலும் திருவாரூரிலிருந்து சுமார் 30 கிமி தொலைவிலும் இருக்கிறது. கூகுள் மேப்பிள் திருமருகல் என்று வழி தேடிச் சென்றால் புறாக்கிராமத்தை அட்டயலாம்.)