Monday, October 06, 2008

பெருநாள் சிந்தனை : உதவும் கரங்கள்

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஒரு தடவை சொன்னார்.
“நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.”

முஸ்லிம்களது வரலாற்றில் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நம்பிக்கை அளிக்கிற தலைவராகவும், உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு சவால்விடுபவராகவும் திகழ்ந்த மஹாதீரின் இந்தக் கருத்து மிகுந்த கவனத்திற்குரியது.

உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கனிசமானது. உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 630 கோடி என்றால் அதில் 150 கோடிப் பேர் முஸ்லிம்கள். அதாவது நால்வருக்கு ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்.

உலகம் முழுவதிலும் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் வாழும் நாடுகளில் கனிசமாக செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள். பெட்ரோலிய பலம், அல்லது கனிம வளம், குறைந்த பட்சம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வாழ்வது, சில பகுதிகளில் அரசியில் ஆளும் தர்ப்பை தீர்மாணிப்பவர்களாக இருப்பது ஆகிய காரணங்களால் அவர்களது செல்வாக்குக்கு குறையொன்றும் இல்லை. என்றாலும் அவர்களது மரியாதை கேள்விக்குரியதாகி இருக்கிறது. இன்றைய சூழலில் அவர்களது கருத்துக்கு மதிப்பு கிடைப்பது இல்லை. அவர்களது மனோ உணர்வு கவனத்தில் கொள்ளப் படுவதில்லை. அவர்களைப் பாதிக்கிற விசயங்கள் குறித்து அக்கறை செலுத்தப் படுவதில்லை. உலக அளவில் கணிசமாக அவர்கள் வாழ்ந்தாலும் இன்றைய நிலையில் அவர்கள் அநாதைகளைப் போல அல்லது கேட்பாரற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக வரலாற்றில் முன்னெப்பேதையும் விட சவாலான சூழலில் உலக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

இந்த்ச் சூழல், முஸ்லிம் சிந்தனையாளர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. வெகு தூரத்தில் எங்காவது, அல்லது எப்பாடு பட்டவது இந்நிலையை மாற்றுவதற்குரிய ஒரு மகத்தான சக்தி வெளிப்படாதா என்று அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருக்குரானும் நபிவழியும் நபித்தோழர்களுடைய வாழ்கைப் பாடங்களும் இந்த இருட்டுப் பள்ளத்திலிருந்து வெளியேற வழி என்ன சொல்கின்றன என்று விழிகளை விரித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பட்ட சிந்தனைகள் முன்வைக்கப் படுகின்றன. கணக்கற்ற யோசனைகள் கடுமையாகவும் மென்மையாகவும் சமுதாயத்திற்கு முன் கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். ஆயிதமேந்திய போராட்டம் ஒன்றே அத்தனை பிரச்சினைகளையும் மொத்தமாக தீர்கக் கூடியது என்று சம்யத் தூய்மைவாதம் பேசிய ஒரு சாரார் உரத்து வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். கல்வி விழிப்புணர்வே முக்கியம் என்று மற்றொரு சாரார் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள், சிறந்த தலைமையை தேடி பலர் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலோர் பொத்தம் பொதுவாக ஒற்றுமை தேவை என்பதை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஒற்றுமைதான் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தென்படவே மாட்டேன் என்கிறது.

உலகின் மிகப் பெரும் ஆச்சரியம் இது தான். அல்லாஹ் அக்பர் என்ற ஒரு வார்த்தையில் குனியவும் நிமிரவும் தாழவும் எழுந்து நிற்கவும் கற்பிக்கப்பட்டு ஒரு ராணுவக் கட்ட்மைப்புக்கு பழக்கப் படுத்தப் பட்ட சமுதாயம், நமை பிரிக்கிற தடைக்கற்களை விட நம்மை பிணைக்கிற கயிறுகளே அதிகம் எனபதை நடைமுறையில் நிரூபித்துள்ள ஒரு சமுதாயம், ஒன்று படுவதற்கான வழிகளை பல கோடிக்கணக்கான வார்த்தைகளில் தேடிக் கொண்டிருக்கிறது.

ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிகள் என்னென்ன எனபது பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கிறது. குரான் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்பதில் தொடங்கி கோகோ கோலாவை புறக்கணிக்க வேண்டும் என்பது வரை ஏராளமான வழிகள் அலசப் பட்டு விட்டன. இந்தச் சூழலில் தான் மஹாதீர் முஹம்மதுவின் இந்தக் கருத்து முன்வைக்கப் பட்டுள்ளது.

“நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.”

யோசிக்க வேண்டிய விசயம் தான். காரணம் இது வரட்டு வேதாந்தம் அல்ல.எதார்த்தமான ஒரு உண்மை.

ஒற்றுமைக்கான வழிகளை த்ததுவார்த்த ரீதியாக தேடிப் புறப்பட்ட பலரும் புறப் பட்ட இடத்திற்கே வந்து நின்றார்கள். அல்லது வழி தெரியாமல் காணாமல் போனார்கள். அல்லது ஆயுதங்ளை தூக்கிக் கொண்டு தங்களது நிம்மதியையும் சமுதாயத்தின் நிம்மதியையும் போலி ஜிஹாதின் சந்தையில் விலைபேசி விற்று விட்டார்கள் காரணம் தத்துவார்த்த ரீதியாக ஒற்றுமையை சிந்த்திததவர்கள் தங்களை மட்டுமே தூய முஸ்லிம்களாக கண்டார்கள். மற்றவர்களை இந்த அற்ப உலகிற்காக மறுமையை அல்லது தீனை விற்றுவிற்றவர்கள் என்று எண்ணிணார்கள்.இதனால் இருதரப்பிற்குமான இடைவெளி இன்னும் அதிகமாகியது. ஒற்றுமை ஒரு படி அல்ல சில நூறு படிகள் தள்ளிப் போனது. அது ஏற்படுத்திய விரக்தி அவர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது. இன்றைய ஜிஹாதியச் சிந்த்னைகள் பெரும்பாலும் விரக்தியில் உதித்ததே தவிர விருப்பத்தில் வந்தது அல்ல. எனவே தான் இன்றைய ஜிஹாதிய அறை கூவல்கள் பிளவுகளை அதிகப் படுத்துகிறது. பிரிவினைக்கு தூபம் போடுகிறது. ஒற்றுமைக்கு உலை வைக்கிறது.

இந்தச் சூழலில் மஹாதீரின் கருத்து தத்துவார்த்த்மாக அல்லாமல் பரீட்சார்த்த நடை முறையில் ஒற்றுமை ஏற்படாமல் போவதற்கான காரணத்தை அலசுகிறது.

உணமையில் முஸ்லிம்கள் ஒருவருகொருவர் உதவிக் கொள்ளாமல் இருப்பது அல்லது உதவிக் கொள்ள முடியாமல் இருப்பது தான் அவர்களது ஒற்றுமையை பெருமளவில் தடுத்து வைத்திருக்கிறது.

மஹாதீர் சர்வதேச அளவில் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்றாலும் நாம் உள்ளூர் அளவில் அதைப் பொறுத்திப் பார்ப்பது இன்றைய சூழநிலைக்குப் பொருத்தமானது.

இஸ்லாம் பரஸ்பரம் உதவி செய்து கொள்வது குறித்து அதிகம் வலியுறுத்துகிறது.

உதவி என்பதை மனிதாபிமானக்கடமை என்றுதான் மற்றவர்கள் சொன்னார்கள். இஸ்லாமோ உதவியை தெய்வ நம்பிக்கையின் ஒரு பகுதி என்று சொன்னது. கடவுளை நம்பி அவனை வழிபட்டு வாழ்வது மட்டுமே தெயவ நம்பிக்கை என்று உலகம் கருதிக் கொண்டிருந்த போது அது மட்டுமல்ல் சக மனிதர்களுக்கு உதவி செய்வதும் அவர்களின் கண்ணீரை துடைப்பதுமே கூட தெய்வநம்பிக்கை சார்ந்தது தான் என்று இஸ்லாம் சொன்னது. இன்னும் கூட சற்று அழுத்தமாக சக மனிதனுக்கு ஏற்படும் துயரிலிருந்து காப்பது தெய்வ நம்பிக்கையின் வெகு சாதாரண நிலை என்று இஸ்லாம் வர்ணித்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
(ஈமான்) இறை நம்பிக்கை, எழுபதுச் சொச்சம் பிரிவுகளை கொண்டது. அதில் உயந்தது லாயிலாக எனும் வார்த்தை. அதில் சாதாரணமானது மக்கள் நடமாடுகிற பாதையில் இடையூறாக கிடக்கிற பொருளை அப்புறப் படுத்துவது. (முஸ்லிம்: 51)

திருக்குரான் பல இடத்திலும் இறைவனை ம்ட்டுமே வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டதற்கு அடுத்த படியாக பெற்றோருக்கும் உற்றாருக்கும் ஏழை எளியவர்கள், அநாதைகளுக்கும் உதவியாக இருங்கள் என்று கட்டளையிடுகிறது.(2:83,4:36.)

இத்தைகய வலியுறுத்தல்களால் ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயத்தில் உதவும் மனப் பான்மை பெருகியிருந்தது. அது எல்லா வகையிலும் வளர்ந்தது. ஆதரவ்ற்றோருக்கும் அடைக்கலம் தேடி வருவோருக்கும் பொருளாலும் அன்பாலும் உதவுவதிலிருந்து ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் போட்டி போடாமல் தவிர்த்து விடுவது வரைக்கும் அனைத்து விசயத்திலும் அந்த உதவி வெளிப்பட்டது,

அத்தகைய உதவிதான் மார்க்கமும் பெரிய அளவில் வளரவும் சமுதாயம் பெரிய அளவில் ஒன்றுபடவும் வலிமையடையவும் காரண்மாக அமைந்தது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மரணித்திருந்த தருணத்தில் அண்ணலாரது புனித உடல் அடக்கம் செய்யப் படுவதற்கு முன்னதாகவே ஆட்சி அதிகாரம் குறித்த சர்சை எழுந்தது. எதிர்பாராத விதமாக அந்தச் சர்சையில் சிக்கியிருந்த அன்ஸாரி முஸ்லிம்களை பஷீர் பின் ஸஃத் (ரலி) எனும் நபித்தோழர் திசை மாற்றினார். சில பேர் மக்களால் அதிகம் கவனிக்கப் படுவதில்லை. ஆனால் அந்த வரலாற்று நாயகர்களின் பங்களிப்பு இல்லை என்றால் வரலாறே திசை மாறியிருக்கும். பஷீர் பின் ஸஃத் (ரலி) அவர்கள் அதில் ஒருவர். அந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் அன்ஸாரிகளுக்கு அவர்களது பெருமைக்குரிய விசயத்தை நினைவு படுத்தினார். அன்ஸாரிகளே! நீங்கள் பெருமானாருக்கு உதவியாளர்களாக இருந்தது போன்றே அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்களுக்கும் உத்வியாக இருங்கள் என்றார். அவரது வார்த்தைகளால் விழிப்படைந்த அன்ஸாரித் தோழர்கள் அதிகாரத்தில் பங்கு கேட்பதை விடுத்து ஆட்சியாளருக்கு உதவியாக இருப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உதவும் மனப்பான்மை என்பது மனிதர்களை எத்த்கைய உய்ரிய நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது? அத்தோடு அதனால் மனித சமூகத்திற்கும் கிடைக்கிற ந்ன்மைகள் எவ்வளவு அருமையானதாகிவிடுகிறது?

உதவி என்பது இணைப்பை வலுப்படுத்தி ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறது.அதன் காரண்மாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு நெருங்கி வந்தவ்ர்களுக்கு தாராளமாக உதவிகளைச் செய்தார்கள். ஜகாத் எனுன் ஏழை வரியை பெற்றுக் கொள்ளத் தகுதி படைத்தவர்களில் இதயத்தால் நெருங்கி வருபவர்களையும் திருக்குரான் சேர்த்தது இந்தக் காரணத்தால் தான். இதில்ருக்கிற தத்துவ தரிசணத்தை கவ்னிக்க முஸ்லிம்கள் பல நேரங்களிலும் மறந்து விட்டார்கள். பிணங்கி நிற்பவர்களை அல்லது பிரச்சினை செய்பவ்ர்களை சரிக்கட்டுவதற்கு எளிய வழி அவர்களுக்கு உதவி செய்வது என்ற அருமையான யோசனையை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள். கத்தியின்றி இரத்தமின்றி ஒரு எதிரியை இல்லாமல் செய்த்விடுகிற சக்தி உதவிக்கு இருக்கிறது என்பதை திருக்க்ரானுடைய வழிகாட்டுதல்களும் பெருமானருடைய வழி முறைகளும் ஏராளமாக பறையறிவித்துக் கொண்டிருக்கின்றன.

உயிருக்கு பாதுகாப்புக் கொடுத்து, மன்னிப்பை வாரி வழங்கி, பொருளாதார உதவிகள் செய்து, அந்தஸ்துக்களை வாரி வழங்கி பெருமானார் (ஸல்) அவர்கள் செயத உதவிகள் கணக்கற்றோரை மார்க்கத்திற்கு அழைத்து வந்தது. சமுதாயத்திற்கு வலிமை சேர்த்தது என்ற உண்மை புடைத்துக் கொண்டு வெளிப்படுகிற போது முஸ்லிம் சமுதாயம் அதை கவனிக்காமல் இருப்பது ஆச்சரியமானது. இன்றைய நாகரீக மோகத்தில் உதவி செய்வதை ஒரு தொல்லயான விசயம் என்று முஸ்லிம் சமுதாயமும் கருதி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் இஸ்லாமோ தேவையான சந்தர்ப்பத்தில் தகுந்த உதவியை செய்யாமலிருப்பது ஒருவரது இறை நம்பிக்கையையே சந்தேகத்திற்குள்ளாகிவிடும் என்று எச்சரிக்கிறது. பாதையில் கிடக்கிற முள்ளை அப்புறப் படுத்துவது இறை நம்பிககையின் சாதாரண நிலை என்று இஸ்லாம் கூறுகிற போது சாலையில் அடிபட்டு விழுந்து கிடக்கிறவருக்கு ஓடிப் போய் உதவி செய்யாமல் ஓர விழியில் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒதுங்கிப் போய்விடுவது எத்தைகைய தெய்வ நம்பிக்கையற்ற செயல் என்பதை சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்,

திருக்குரான் இன்னொரு இடத்தில் வெளிப்படையாகவும் தெளிவாகவும் ஒரு உணமை வெளிச்சப் படுகிறது. மதமற்றவர்கள் யார் தெரியுமா? யார் உதவி செய்யாது வாழ்கிறார்களோ அவர்கள் தான் என்கிறது. மார்க்கத்தை ஏற்ற்றுக் கொண்டதாக சொல்லிக் கொண்டு மார்க்கத்தை பொய்யாக்குபவர்கள் யார் தெரியுமா என்று கேட்கிற இறைவன் அல்லஹ்வையும் தூதரையும் நம்பாதவர்கள் என்று பதில் சொல்ல வில்லலை. அநாதைகளை வெருட்டுகிறவனும் ஏழைகளுக்கு உண்வளிக்கத் தூண்டாதவ்னிமே மார்க்கத்தை பொய்யாக்குபவ்ர்கள் என்று பதிலளிக்கிறான். (திருக்குரான்: 107:1,2,3)

ஒரு மத்ததின் பிரதான கோட்பாடே உதவி வாழச் செய்த்ல் என்பதாக அர்த்தம் கொள்ள இந்த அறிவுறை நிர்பந்திக்கிறது. இந்தக் காரணங்களால் உதவி வாழுதலின் தேவையும் அதனால் கிடைக்கிற நன்மைகளையும் வெரெவரயும் விட அதிகம் கடைமைப் பட்டுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது. .

தகுந்த சம்யத்தில் உதவி செய்வது சமயக் கடமை என்ற நிலையைத் தாண்டி இன்னொரு உண்மையும் கவ்னிக்கத் தக்கது. தகுந்த சம்யத்தில் செய்யப் படும் உதவி அது சிறியதாக இருந்தாலும் பெரும் பலனை தரக்கூடும். அது எத்தகைய ந்ன்மையை திருப்பித்தரக்கூடும் என்றால் அதை நாம் கனவில் கூட எண்ணியிருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்துக்குப் பயணம் செய்து விட்டு திரும்பிய போது, சூழல் அசாதாரணமாக இருந்தது. பெருமானருக்கு இருந்த ஒரே கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போயிருந்தது. மக்காவில் எதிர்ப்பு மனோநிலை கடுமையாகி இருந்தது. யாராவது பலம் பொருந்திய ஒருவருடைய பாதுகாப்பின் அரவணைப்பில் தான் தன்னுடைய சொந்த ஊருக்குள் நுழைய முடியும் என்ற சூழலில் பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்குத்தெரிந்த பிரபலங்களிடமெல்லாம் அபயம் கோரி ஆளனுப்பினார்கள். அஹ்னஸ் பின் சுரைக், சுஹைல் பின் அம்ர் உள்ளிட்ட பலரிடமும் ஒரு ஆதரவுக் கரம்கோரி கைநீட்டினார்கள். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அந்த அபய்குரலுக்கு செவிசாய்க்க, மனித குலத்தை உய்விக்கவந்த அந்தப் புனிதருக்கு உதவிக்கரம் நீட்ட யாரும் தயாராக இருக்கவில்லை. கடைசியில் முத் இம் பின் அதீ என்ற மனிதர் கரம் நீட்டினார். கருணை காட்டினார். பெருமானார் தன்னுடைய பாதுகாப்பில் மக்காவுக்குள் வரலாம் என்று உறுதிகூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவரது ஆதரவில் மக்காவுக்குள் நுழைந்தார்கள்.

தான் செய்த அந்த உதவி தனக்கு எப்படி அதே போன்றதொரு உதவியை பெற்றுத்தரும் என்று முத் இம் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டார். நிலமையில் ஒரு தலைகீழ் மாற்றம் 5 வருடத்திற்குள் நடந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு பத்ரு யுத்தத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த போது மறுநாள் நடைபெறுகிற யுத்தத்தில் எதிரிகள் பலரயும் அவர்களுடைய பெயரைச் சொல்லி இவர் இங்கு விழுந்து கிடப்பார் இங்கு விழுந்து கிடப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது மறாக்காமல் தனது தோழர்களுக்கு ஒரு உத்தரவைச் சொன்னார்கள். “முத்இமை கண்டால் கொன்று விடாதீர்கள்” என்று கட்டளயிட்டார்கள்.

ஒரு உதவியின் பலன் தனி மனிதர்களுக்கு மாத்திரமல்ல சமுதாயத்திற்கும் பெரிய பாதுக்கப்பாக இருக்க முடியும். பெருமானாரிடமிருந்து உதவி பெற்ற பல்ர் ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயத்திற்கு பல் வகையிலும் பாதுகாப்பாக இருந்துள்ளார்கள், சமுதாயம் வலிமைப் பட உதவிய்ள்ளார்கள் என்பதற்கு நிறைய உதாணங்கள் உண்டு. பெருமானாரால் மன்னித்து விடுவிக்கப் பட்ட வஹ்ஷீ (ரலி) அவ்ர்கள், பிற்காலத்தில் தானும் ஒரு நபி என்று வாதிட்டுக் கொண்டு இஸ்லாத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பொய்யன் முஸைலமாவை தீர்த்துக் க்ட்டினார் என்ற ஒரு வரலாறே சான்றுக்கு போதுமானது.

ஒரு சமுதாயம் மற்றவர்களூகு உதவி செய்யும் போது அது பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்றால் அது தன்க்குள் உதவி செய்து கொள்ளும் போதே அதன் ஒற்றுமை உறுதிப் படும். ஒரு குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமெனில் அக்குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். அண்ணனுக்கு தம்பியோ அத்தாவுக்கு பிள்ளைக்ளோ ஒரு தேவைப் பட்ட தருணத்தில் உதவாமல் இருந்து விட்டால் அப்போது தான் பிரிவினை வெடிக்கும். அது போலத்தான் சமுதாயத்திலும் தேவைப் படுபவர்களுக்கு தேவைப் படுகிற சமய்த்தில் உதவவேண்டும். இல்லை என்றால் சமுதாயத்தின் ஒற்றுமை சந்தேகத்திற்குரியதாகிவிடும்.

உதவி செய்தால் உபத்திரவம் வந்து சேரும் என்று இன்றைய நாகரீகம் சொல்லிக் கொடுக்கிறது. அந்த நச்சுக் கருத்துக்கு இடமளித்து விட்டால் மனித வாழ்வு முடை நாற்றம் பிடித்ததாகி விடும்.

இந்திய தேசத்தை மட்டுமல்ல உலகையே அதிரச் செய்த நொய்டா படுகொலைகள் பச்சிளம் குழந்தைகள் பலரை பலி கொண்டது. அந்தப் படுகொலைகளைவிட திடுக்கிட வைத்த அம்சம் எது என்றால் நகரின் பரபரப்பு மிகுந்த இடத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் இப்படு கொலைகள் அரங்கேறியுள்ளன என்பது தான். அக்கம் பக்கத்திலிருந்த யாருக்கும் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த கொடூரம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வில்லை. தன்னை சூழ்ந்திருக்கிற கருகிய பிணவாடையை கூட உணர முடியாதவாறு நாகரீகம் மனிதர்களை மூச்சடக்க வைத்திருக்கிற்து, தொழில் நுட்பம் தொலை தூரத்தில் நட்க்கிற கிரிக்கெட் மேட்சில் விக்கெட் வீழ்நத செய்திய பந்து தரையை தொடுமுன் தந்துவிடுகிறது. ஆனால் பக்கத்து வீட்டில் பல ஆண்டுகளாக வசிக்கும் மனிதர்களைப் பற்றி ஒரு வார்த்தை அளவிற்கு சொல்வதற்கு கூட அறிந்து கொள்ள விடாமல் செய்துவிட்டது.

இந்த விபத்து தொடர்கிற எந்த சமூகத்திலும் மானுடம் கருகிப் போகும். இஸ்லாமின் கருத்துப் படி மார்க்கமும் அற்றுப் போகும். இத்தகைய ம்னோ நிலை முஸ்லிம் சமூகத்தில் நிலவும் என்றால் அங்கு ஒற்றுமை கிளை விட அல்ல, முளைவிட விடக் கூட முடியாது எனவே ஒற்றுமை குறித்த சிந்தனையை நட்டக் கணக்குப் பார்க்காத உதவியில் இருந்து தொடங்க வேண்டும்,

உதவி என்பது பணத்தால் செய்யப்படுவது மாத்திரமல்ல. சில சச்சரவுகளை பொருட்படுத்தாமல் இருப்பது, தொந்தரவுகளை மன்னித்து விடுவது, நல்லுபதேசம் செய்வது, ஆலோசனை வழங்குவது, உரியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது குறைந்த பட்சம் அவதூறுகள் பழிச் சொற்களை வீசுவதிலிருந்து தவிர்ந்து கொள்வது அனைத்துமே ஒருவருக்கு செய்கிற உதவியில் அடங்கும்.

உதவி என்று வரும் போது ஒரு பொதுக் கண்ணோட்டமும் அவசியம். நம்முடையவர்களுக்கு மட்டும் என்ற குறுகிய சிந்தனை உதவியின் மரியாதைய குறைத்துவிடும் மட்டுமல்ல. அது நன்மைக்கு பதிலாக தீமையையே ஏற்படுத்தும். தேவைப்படுவோருக்கு தேவையான தருணத்தில் தேவையான வகையில் உதவ் வேண்டும். எந்த சிறு அடையாளங்களுக் குள்ளும் உதவியை சுருக்கி விடக் கூடாது.

இத்தகைய உதவியை முஸ்லிம்கள் தம் குடும்பத்தில் தொடங்கி மஹல்லாவில் வளர்த்து ஊரளவில் தொடருவார்களானால் ஒற்றுமைக்கான வழிகள் காணல் நீராக இல்லாமல் கண்முன் தெரியக் கூடியாதாக இருக்கும். தனி மனிதர்க்ள மட்டுமல்ல ஜமாத்துகள் நல்ல சங்கங்கள் அமைப்புக்கள் இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கும் சூழ்நிலை வருமென்றால், உரிமை கேட்டு உயரும் கரங்களை விட உதவு செய்ய விரையும் கரங்கள் அதிகமாக இருக்கும். அபோது ஒற்றுமை தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும்.

நாம் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்வோம் என்ற சிந்தனையை ஒரு உறுதி மொழியாக எடுத்துக் கொள்வோமானால் நம்து பெருநாட்கள் உண்மையில் பெருமைக்குரிய நாட்களாக அமையும். நம்க்கும் சமுதாயத்திற்கும்.

No comments: