Friday, June 01, 2012

அஜ்மீர் அரசியல்


ஏபரல் 8 ம் தேதி பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒரு நாள் சொந்தமுறைப் பயணமாக இந்தியா வந்தார். சுல்தானுல் ஹிந்த் என்றும் கரீப் நவாஸ் என்றும் புகழப்படுகிற அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ் தர்ஹாவிற்கு ஜியாரத் செய்ய வந்த அவரை  மதிய விருந்துக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நெ 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்ட சர்தாரி, பிரதமர் மன்மோகனுடன் தனிமையில் நேருக்கு நேர் 45 நிமிடங்கள் உரையாடினார்

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர் என்று இந்தியா குற்றம் சாட்டுகிற ஜமாத்து தாவா அமைப்பின் தலைவர் ஹாபிழ் முஹம்ம்து சஈதை கைது செய்ய போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தானின் உச்சசநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், உலகின் நியாயவான்(?) அமெரிக்கா ஏப்ரல் 2012 ல் அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்தது. அதன் எதிர் நடவடிக்கையாக பாகிஸ்தானை பூர்வீமாக கொண்டு இங்கிலாந்தின் ரோதர்ஹாமில் Rotherham  வசிக்கிற பெரும் பணக்கார்ர் லார்டு பீர் அஹ்மது, அதிபர் ஒபாமாவின் பிடித்து தருபவருக்கு அதைவிட அதிகமாக தான் பரிசு தரப்போவதாக அறிவித்தார். இந்தப் பிரச்சினையில் அரசியலின் சூடு உச்சநிலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் உலகின் மிக உயரமான இராணுவ முகாம் அமைந்திருக்கிற சியாசின் பகுதியில் பனிப் புயலில் சிக்கி 160 க்கு மேற்பட்ட பாகிஸ்தானிய வீர்ர்கள் பலியாகி இருந்தனர். இத்தனை களோபரங்களும் நடந்து கொண்டிருந்த ஏப்ரல் மாத்த்தின் முதல் பகுதியில் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரங்கட்டச் செய்கிற வகையில் பாகிஸ்தானிய அதிபர் இந்தியாவுக்கு வந்தார்.

தீடீரென்று நிகழ்ந்த இந்த வருகையும் சந்திப்பும், கோடை வெயிலின் உக்கிரத்திற்கு நடுவே அரசியல் அரங்கில் வீசிய விரும்பத்தகுந்த ஒரு தென்றலாக உருவகப் படுத்தப் பட்டது.

நம்மை பிரிக்கிற தடைக் கற்களை விட நம்மை இணைக்கிற படிக்கறகளே அதிகம் எனும் சொல் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் நூறு சதவீதம் பொருந்தும்..   கிட்ட்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கை அம்சங்களை கொண்ட இரண்டு நாடுகள் வலிந்து உருவாக்கியும் பெருக்கியும் கொண்ட பகை உணர்ச்சிகளால் தமது சக்தியை இழந்து வளர்ச்சியில் பெரிதும் சரிவு கண்டுவருகின்றன. இதில் உயிரிழப்புக்களும் மனித மரியாதைக்கு எதிரான வன் கொடுமைகளும் கணக்கின்றி எல்லைப் பகுதியை இரத்த மயப்படுத்தி வருகின்றன. இந்தியா தனக்கு கீழே ஒரு எதிரி இருந்தாக வேண்டும் என்று திட்டமிட்டோ என்னவோ எந்த வகையிலும் பாகிஸ்தானோடு சமாதானம் அடைந்து விடாமல் இஸ்லாமிய தீவிரவாதச் சூட்டை அடைகாத்து வருகிறது. பாகிஸ்தானிலும் ஊழல் அரசியல் வாதிகள் இந்தியாவையும் காஷ்மீரையும் காரணம் காட்டியே தங்களது நாட்களை கட்த்திச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தானின்  அரசியல் தலைவர்கள் திடீர் திடீரென நெகிழ்வான ஒரு காரணத்தை துணையாக கொண்டு இந்திய விஜயம் செய்வதும் அப்படி வருகிறவர்களுக்கு இந்தியாவில் சகோதர பாசம் மிக்க விருந்துபசாரம் நடைபெறுவதும் இரண்டு நாடுகளின் அரசியல் அரங்குகளிலும் ஒரு மின்னல் கீற்றாய  அவ்வப்போது நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்துவதுண்டு. சர்தாரியின் இந்தப் பயணத்தின் போதும் அத்தகைய ஒரு மலர்ச்சி தெரிந்தது.

சர்தாரியின் இரண்டாவது வருகை இது. இதற்கு முன் ஒரு தடவை 2005 ல் அவரது  மனைவியும் படுகொலை செய்யப் பட்ட முன்னாள் பிரதம்ருமான பேனசீர் புட்டோவுடன் இதே போன்றதொரு பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

சர்தாரி பக்தி உணர்வு மிக்கவர் என்று அடையாளம் காணப்பட்டவர் அல்ல. அவருடைய தவறுகளையும் பாவங்களையும்  உற்று நோக்க இந்தப் பயணம் பயன்பட்டால் சரிதான் என்று பாகிஸ்தானிய பத்ரிகையாளர்கள் நையாண்டி செய்கிறார்கள். சுவிஸ் வங்கியில் அவர் குவித்து வைத்திருக்கிற முறையற்ற பணத்திற்காகவும் பாகிஸ்தானின் வரலாற்றிலேயே ஊழல் மிகுந்த ஒரு அரசிற்கு தலைமேற்றிருக்கிற பாவத்திற்காகவும் பரிகாரம் தேடி அவர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தியிடம் சென்றிருந்தால் அவருக்கு அங்கு பச்சை விளக்கு கிடைக்காது என்று பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர்கள் கடுகடுக்கிறார்கள்.

சர்தாரியின் இந்த் வருகைக்கு காரணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. தனது பிரச்சினைகளிலிருந்து விடுபட்டால அஜ்மீருக்கு வருவதாக அவர் உறுதியேற்றிருந்தார். அதனால வந்து சென்றார் என்று சாமானிய அளவிலும், இல்லை பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் சர்தாரி பரிதாபகரமான ஒரு அதிபராக இருக்கிறார். அ வர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னும் ஒரு வருட்த்தில் பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டும். மட்டுமல்லாது பாகிஸ்தானின் அனைத்து உட்கட்டமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடக்க் இருக்கிற சூழ்நிலையில் தன்னுடைய இமேஜை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்த்த்திற்கு அவர் ஆளாகியிருக்கிறார். இப்போதைய அவரது புனிதப் பயண் திட்டமும் அந்த இமேஜிற்காக ன போராட்ட்ட்த்தில் ஒரு அம்சமே என  அரசியல் பார்வையாளர்கள் மட்ட்த்திலும் கருத்துக்கள் பேசப் படுகின்றன.

அஜ்மீருக்கான அவரது பயணத்தில் அரசியல் இலாப நோக்கு மறைந்திருக்கிறது என்று ஒருபுறம் பேசப்பட்ட்து என்றால அவரது அஜ்மீர் வருக்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்காத குறையாக இந்தியா கொடுத்த வரவேற்பும் அரசியல் இலாபத்தை நோக்கமாக கொண்ட்தாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகம் தேடப்படுவோர் என இந்தியா வெளியிட்ட  50  பேர் கொண்ட பட்டியலில் பிரதானமாக இடம் பெற்றுள்ள ஹாபிழ் சயீதை பாகிஸ்தானிய நீதிமன்றம் விடுவித்திருக்கிற சூழ்நிலையில் இந்தியாவின் இந்த வரவேற்பு பலரது புருவத்தையும் உயரச் செய்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது.   
சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு நட்பு நாடு MFN status (Most Favoured Nation) என்ற அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. இது இருநாட்டு வர்த்தகர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றாலும் இந்தியாவிற்கு இதில் கூடுதல் நன்மை என்னவென்றால் காஷ்மீர் விவாத்த்திற்கு தீர்வுகாணும் வரை இந்த தகுதியை வழங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அந்த நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகும்.

எப்படியே முறுக்கிக் கொண்டு நிற்கிற இரு நாடுகளும் முறுவலித்துக் கொண்டன. ஒரு ஆங்கிலப் பத்ரிகை சர்தாரி அஜ்மீரில் என்னவெல்லாம் பிரார்த்தனை செய்திருப்பார் என்பதை கற்பனையாக எழுதிவிட்டு இறுதியாக, காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களோ இரு நாட்டின் மக்களுக்கும் உண்மையாக நல்லது ஏதாவது நடக்கட்டும்  என்று ஆசீர்வதித்தார். என எழுதியிருந்த்து.

அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்களின் அடக்கவிட்த்தை மையமாக கொண்டு நடை பெற்ற இந்த அரசியல் நிகழுவுகளில் - ஒரு வேளை அது நாடகமாகவே தெரிந்தாலும் கூட - இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் கவனிக்கத் தக்க சில செய்திகள் கிடைக்கின்றன. 
.
முஸ்லிம் சமூகத்தில் பொதுவாக தர்ஹாக்களை பற்றிய ஒரு அதிருப்தி உண்டு பண்ணப் பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால்?  இஸ்லாமிய தஃவா எனும் பிரச்சாரக் களத்தில் பங்காற்றுவதாக கூறிக் கொள்பவர்களே இந்த அதிருப்தியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

தர்ஹாக்கள் இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டில் இடையூறு செய்கின்றன என்று தன்னிச்சையாக குற்றம் சாட்டுகிற அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பயணத்தில் தர்ஹாக்களில் அடக்கம் பெற்றுள்ள நல்லவர்கள் ஆற்றிய மகத்தான பணிகளின் கனத்தை எண்ணிப் பார்க்க அறவே தவறிவிடுகிறார்கள். அல்லது எண்ணிப்பார்க்க மறுக்கிறார்கள். தம்மை மட்டுமே தஃவாவின் காவலாளிகளாக கருதிக் கொளகிற மடத்தனம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

சர்தாரியின் அஜ்மீர் பயணம் அஜ்மீர் காஜாமுஈனுத்தின் சிஸ்தியை கடவுளாக அல்லது ஏதோ ஒருவகையில் கடவுளின் பிரதிபிம்பமாக கருதிய காரணத்தால் நிகழ்ந்த ஒரு பயணம் அல்ல.

அஜ்மீர் தர்காவின் அலுல்வலகத்தின் விருந்தினர் புத்தகத்தில் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி என்று கையெழுத்திட்டு, சர்தாரி என்ன எழுதினார் என்பதை ஆசிய டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது.
"Is mukkadas mukaam par aakar mujhe jo roohani khushi mili hai, woh nakaabile bayaan hai. Allah taala se dua hai ke tamaam insaniyat ke liye asaaniya paida kare
இந்தப் புனித தளத்திற்கு வந்தததால் எனக்கு ஆதமார்த்தமான மகிழ்ச்சி கிடைத்தது. அதை விவரிக்க இயலாது. அனைத்து மனித சமூகத்தின் சிரமங்களை இலேக்கட்டும் என்பதே உயர்ந்தவன் அல்லாஹ்விடம் நான் வைக்கும் பிரார்த்தனை.

தர்ஹாக்கள் அல்லாஹ்வை மறக்கடிப்பவை அல்லது துறக்கச் செய்பவை என்ற துர்ப்பிரச்சாரத்தின் கிளிப்பிள்ளைகள் இந்த வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும்

முஸ்லிம் சமுதாயம் தெளிவாகவே இருக்கிறது. தம்மை மட்டுமே தூய்மையானவர்களாக - அறிவாளிகளாக காட்டிக் கொள்ள முயல்கிற சிலசுய நல சக்திகள் மட்டுமே அது களங்கிக்கிடப்பதாக புரளி கிளப்புகிறார்கள்.

தர்ஹாக்களில் நடை பெறுகிற மார்க்கத்திற்கு முரணான செயல்கள் கண்டிப்பிற்குரியதாக இருக்கலாம். சொந்த தேவைகளுக்கு பணம் சம்பாதிப்பதற்காக தர்ஹாக்களைப் பயன்படுத்துகிறவர்கள் கணடனத்திற்குரியவர்களாக இருக்கலாம் ஆனால், தர்ஹாக்களில் அடக்கமாகி இருப்ப்பவர்கள் நம் கவனத்திற்குரியவர்கள். ஒவ்வொரு ஊரிலும் அவர்களது ஈமானிய வாழ்வும் இஸ்லாமிய பற்றும் போதனைகளும் சமுதாயத்திற்கு அவசியமானவை.

தர்ஹாக்களில் அடக்கம் பெற்றுள்ளவர்கள் வாழ்ந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருந்தார்கள் மறைந்த பிறகும் பயன் தருபவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பலனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது  புத்திசாலி சமூகத்தின் கடமையாகும்.

தர்ஹாக்களின் மேலுள்ள கோபத்தில் அங்கு அடக்கமாகியுள்ள பெரியோர்களின் மார்க்கச் சாதனைகளையும் இறை பக்தியையும் கூட கவனிக்க மறுப்பது நியாயமல்ல.

இறை நேசர்கள் அல்லாஹ்வின் போர்வைக்குள் இருக்கிறார்கள், அவர்களை அல்லாஹ்வே அறிவான் என இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதுண்டு. இறைநேசர்களின் மார்க்கப் பணியும் சமுதாயச் சேவையுமே பல சந்தர்ப் பங்களில் அவர்களில் சிலரை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

ஏர்வாடி இபுறாகீம் ஷஹீத் வலியாகட்டும் , நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகமாட்டும் தங்களது சமுதாய்ப் பணிகளின் காரணமாகவே மக்களால் அடையாளம் காணப்பட்டார்கள். அஜ்மீரில் அடக்கமாகியுள்ள காஜா முஈனுத்தின் சிஸ்தி (ரஹ்) அவர்களும் அன்னாரது  மார்க்க சமுதாயப் பணிகள் காரணமாகவே இந்த மரியாதையை ப் பெற்றார்கள்.

சமயத்தின் வளர்ச்சியில் மிகப் பிரம்மாண்ட சாதனைகளை படைத்த அந்த நல்லவர்களின் வழிகாட்டுதல்களையும், மாக்கப் பிரச்சாரத்திற்கு அவர்கள் கையாண்ட உத்திகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள இன்றுள்ள முஸ்லிம் சமுதாயம் மறுக்கும் அல்லது மருகும் எனில் இன்று முஸ்லிம் சமூகத்தின் முன் எழுந்துள்ள மிகப் பெரும் சவால்களை சமாளிப்பது சிக்கல் மிக்கதாக மாறிவிடும்.   

தஃவா எனும் பெயரில் ஆர்ப்பாட்டமாக அலட்டலாகவும் வீடீயோ வெளிச்சத்தில் மேதாவித்தனம் காட்டுவோர் கவனித்துக் கொள்ளட்டும். சர்தாரி விஜயம் செய்த காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி (ரஹ்) அவர்கள் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 90 இலட்சம் பேர் இந்தியாவில் இஸ்லாமை தழுவியுள்ளதாக வரலாற்றாசிரியர் ஆர்னால்டு கூறுகிறார்.  வட இந்தியாவில் இஸ்லாம் என்பது ஜிஸ்தி அவர்களின் சேவைக்கு கிடைத்த கொடை என வரலாறு கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இத்தனை அதிகமான அளவில் ஸ்லாத்தைப் பரப்பிய ஒரு பெரியாரை காண்பது அரிதுஎன இஸ்லாமிய கலைக் களஞ்சியம்கூறுகிறது.

இஸ்லாம் என்பது சேவா மார்க்கம் என இந்திய சமூகத்தில் முதனமையாக நிலைப் படுத்திக் காட்டி பெருமை முஹ்யீத்தீன் ஜிஸ்தியை சாரும். கரீப நவாஸ் ஏழைகளின் பங்காளர் என்று அவருக்கு கிடைத்த புகழ்ப் பெயர் அந்த அவரது வாழ்வின் தத்துவத்தையே புலப்படுத்துகிறது.

இன்றைக்கு சற்றோறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 430 ரஜப் 14 வெள்ளிக்கிழமை அன்று அன்றைய தெற்கு ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதியாகவும் இன்றைய தெற்கு ஈரானின் ஒரு பகுதியாகவும் இருக்கிற் சீஸ்தான் என்ற ஊரில் சையத் கியாசுத்தீன் அஹ்மது என்பவரின் மகனாக முஈனுத்தீன் பிறந்தார். நபிகள் நாயகத்தின் பேரர்  ஹுசைன் (ரலி ) அவர்களது பாரம்பரியம் அவர்களுடையது.

தாயை சிறுவயதிலேயே இழந்து விட்ட அவர், 9 வயதில்  திருக்குர் ஆனை முழுவதுமாக மன்னம் செய்திருந்தார். 15 வயதில் தந்தையை இழந்தார். அப்போது தந்தை வழிச் சொத்தாக காற்றாடி மூலம் நீர் இறைக்கும் இயந்திரத்தை கொண்ட ஒரு தோட்டம் அவருக்கு கிடைத்த்து.  

அந்த தோட்டத்திற்கு ஒரு முறை இபுறாகீம் தந்தூஸி என்ற பெரியவ்ர்  வந்தார். அவரது வருகை இளைஞர் மூஈனுத்தீனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்க்கைகு ஆதாரமாக இருந்த தோட்ட்த்தை விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு கல்வியை தேடி அன்றை இஸ்லாமிய கல்வியின் மையங்களாக திகழ்ந்த புகாரா சமர்கண்த் ஆகிய நகரங்களுக்குச் சென்றார். அங்குள்ள மேதைகளிடம் கல்வியும் ஆன்மீகத்தையும் கற்றார்.
                       
ஹிஜ்ரி 560 ல் சூபி ஞானி காஜா உஸ்மான் ஹாரூனியை சந்தித்த அவர் ஜிஸ்திய்யா எனும் ஆன்மீக நடைமுறையில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் 20 ஆண்டுகள் இருந்தார்.

பக்தாதில் அக்கால கட்டத்தின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாகவும் இஸ்லாமிய அழைப்பாளராகவும் இருந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியையும் ஷஹாபுத்தீன் சுஹ்ரவர்தீ அவர்களையும் சந்தித்தார். இவற்றின் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி சமுதாயச் சேவை பற்றிய அக்கறை அவருக்குள் மிகைத்தன.

கடைசியாக ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு சென்ற பிறகு நபிகள் நாயகத்த்தின் அடக்கவிட்த்தை தரிசிக்க மதீனாவுக்கு வந்தார். அங்கு அவரது கனவில் தோன்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தியாவுக்கு சென்று சேவை செய்யுமாறு கூறீனார்கள்.

தனக்கான களம் சுட்டிக்காட்டப்பட்டவுடன் அங்கிருந்து பயணப்பட்ட ஜிஸ்தி (ரஹ்) லாஹூர், முல்தான் ஆகிய நகரங்களில் சிறிது காலம் தங்கியிருந்து விட்டு தில்லி வழியாக அஜ்மீர் வந்து சேர்ந்தார். அஜ்மீரை தனது சேவைகளுக்குரிய தளமாக அமைத்துக் கொண்ட அவர் பேதம் பாராது அனைத்து தரப்பு மக்களுக்காகவும் சேவையாற்றினார். அதனால் மக்களின் அன்பை பெற்றார்.

அன்றைய இராஜஸ்தானில் கோலச்சோச்சிக் கொண்டிருந்த சதி  எனும் உடன்கட்டை பழக்கத்தை எதிர்த்தர்ர். இதை அறிந்த இராஜஸ்தானின் இளவரசி தனது கணவர் இறந்தவுடன் உடன் கட்டை ஏற சமத்திக்காமல் காஜா முஈனுத்தீன் சிஸ்தியிடம் அடைக்கலம் தேடினாள். சிஸ்தி அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த்தோடு அவரையே திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்போதையை அரசன் பிருத்விராஜ் சௌகான் முஈனுத்தீன் ஜிஸ்திய நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். அவானது உத்தரவை கண்டு அச்சப்படாத சிஸ்தி ஒரு முஸ்லிம் மன்னரிடம் அவன் பிடிபடுவான என்று கூறினார். சிறிது காலத்திற்குள்ளாக பாரசீகத்திலிருந்து படை எடுத்து வந்த ஷஹாபுத்தீன் கோரி இராஜஸ்தானை கைப்பற்றி தில்லையில் அரியணை ஏறினார்.

அஜ்மீரில் சேவையாற்றுகிற காஜா முஈனுத்தீன் ஜிஸ்தியை மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக கோரி அஜ்மீருக்கு வந்தார்.

அதிலிருந்து தில்லியை ஆளூபவர்கள் அஜ்மீருக்கு வருவது வாடிக்கையான ஒரு தொடராகவிட்ட்து. கோரிக்குப் பிறகு குத்புதீன் ஐபக்கும் அவருக்கு பிறகு இல்துமிஷும் ஆட்சிக்கு வந்த்து ம காஜா முஈனுத்தீன் சிஸ்தியை மரியாதை நிமித்தம் சந்தித்து சென்றார்கள்.

ஆட்சியாளர்கள் பார்வையாளர்களாக வந்து சென்ற போதும் காஜா முஈனுத்தீன் சிஸ்தி அஜ்மீரின் ஏழை மக்களுடனேய்யே வாழ்ந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.

இல்துமிஷின் காலத்தில் தில்லியிலிருந்து வந்த ஒரு ஏழை தனது நிலம் அபகரிக்கப் பட்ட்தாக முறையிட்டார். அந்த ஏழையுடன் அப்படியே புறப்பட்ட சிஸ்தி தில்லியை அடைந்தார். பிரமுகர்கள்  பலரும் சிஸ்தியிடம் பணிந்து நின்றனர். யாரிடமாவது சொல்லி அனுப்பியிருந்தால் போதுமே இந்தக் காரியத்தை நாங்கள் கவனித்திருப்போமே என்று கூறினார். சிஸ்தி சொன்னார்; இதற்கான நன்மையை விட்டு விட நான தயாராக இல்லை. அதன காரணமாகவே நான் வந்தேன் என்றார்.

காஜா முஈனுத்தீன் சிஸ்தி அவர்களின் ஆன்மீகப் பணி என்பது கித்மதுல் கல்க் மக்கள் சேவையை அடிப்ப்டையாக கொண்ட்தாக-  குறிப்பாக அடித்தட்டு மக்களின் தேவைகளை முறையீடுகளை தீர்க்க முயற்சிப்பதும் அவர்களை நல் வழிப்படுத்துவதுமாக இருந்த்து.

நதியைப் போன்ற தயாள குணத்தோடும் சூரியனைப் போன்ற கருணையோடும் பூமியைப் போல விருந்தளிக்கும் இயல்போடும் வாழுமாறு அவர் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

பிறரின் கவலையை அகற்றுவதும் அதை தாம் சுமந்துகொள்வதுமே  தன்னைப் பொருத்தவரை அற்புதமான பணி என்று அவர் கூறினார், ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும், எளியவர்களுக்கு உதவுவதற்கும் அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார்.
  
அன்றைய இந்திய மண்ணில் வேறோடியிருந்த சாதீய ஜமீந்தாரி கோட்பாட்டிற்கு எதிராக  சிஸ்தி  அவர்கள் பயன்படுத்திய இஸ்லாமின் த்த்துவங்களாலும் சேவைகளாலும் கவரப்பட்ட மக்கள் இந்தப் பெரியாரின் மார்க்கம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கிறதென வியந்து இஸ்லாமை தழுவினர். இஸ்லாமை தழுவாதவர்களும் அவரை மதிக்க தவறவில்லை. அதனால அவர் இறந்த பிறகும் அவரை தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை குறைய வில்லை.

பிந்தைய நாட்களில் தில்லியில் அரியணை ஏறிய அரசர்களும் அனைவரும் அஜ்மீருக்கு ஜி ஃயாரத் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். முகலாய சக்ரவர்த்தி அக்பர்  பல முறை அஜ்மீருக்கு வந்து சென்றுள்ளார். அவரது மகன் ஜஹாங்கீர் இங்கு வந்தால் காலில் செருப்பு அணியாமல் பக்கீர் போல நடந்து செல்வார் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஷாஜஹானும் ஒளரங்கசீப்பும் ஜியாரத்திற்காக இங்கு பல முறை வந்து சென்றுள்ளனர்.

மரியாதை நிமித்தமாக அஜ்மீருக்கு வந்த ஆட்சியாளர்கள் அந்த மகத்தான மனிதரது வாழ்விலும் போக்கிலும் அவர் நிகழ்த்திய சாதனையிலும் சிறிதளவாவது அக்கறை செலுத்தியிருந்தால் இந்தியாவில் இன்று இஸ்லாம் மிக மரியாதையான ஒரு இட்த்தை பிடித்திருக்க முடியும்.  அரசர்களுக்கு ஆட்சியைப் பற்றிய கவலை இருந்த்தே தவிர மக்களின் நல்வழியைப் பற்றிய அக்கறை இருக்கவில்லை.

சர்தாரி  அஜ்மீர் தர்ஹாவிற்கு 5 கோடி தருவதாக கூறியிருக்கிறார். தன்னுடை ஒரே சொத்தாக இருந்த தோட்ட்த்தை விற்று ஏழைகளுக்கு தர்ம்ம் செய்த காஜா முஈனுத்தீன் சிஸ்திக்கு அது எந்த வகையில் மகிழ்ச்சியை தரக்கூடும் என்று தெரியவில்லை. ஆனால் அவர் தனது நாட்டில் ஏழைகளின் வாழ்வு மலரவும் அதன் வழியாக இஸ்லாம் மிளிரவும் ஒரு சிறு துரும்பை அசைத்தாலும் போதும் மண்ணுக்கடியில் வாழும் அந்த மனிதர் சிலிர்ப்படையக்  கூடும்.   

ஆங்கில ஆட்சி அமைந்த பிறகு கவர்னர்கள் பலரும் இங்கு வந்து சென்றுள்ளனர். 1902 ல் கர்சன் பிரபு அஜ்மீருக்கு வந்தார். அப்போது இந்தியாவில் இந்த அடக்கவிடம் ஜாதி மத பேதமின்றி பேரரசு புரிகிறது என்று எழுதினார்.  

கர்சன் பிரபிவின் வார்த்தைகளை இன்றைய முஸ்லிம்கள் கவனிக்கட்டும். அனைத்து தரப்பு மக்களும் இஸ்லாமை தேடி வருகிற தளங்களாக இன்றளவும் தர்ஹாக்கள் திகழ்கின்றன.

இன்றைய உலகில் இஸ்லாம் செயல்பட வேண்டிய முக்கிய களமாக இந்தியா இருக்கிறது என்பதை வெகு தாமதமாக இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமின் நன்மை சுமார் 80 கோடி மக்களுக்கு தேவையுடையதாக இருக்கின்றது . போதை, ஆபாசம், வட்டி, சூது, சாதீய வன் கொடுமைகள், தீண்டாமை, உருவ வழிபாடு போன்ற தீமைகளிலிருந்து மீளாத காரணத்தால் துறவிகள் என்ற போர்வையில் இருக்கிற போலியான மனிதர்களின் மந்தைகளாக மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி அறிவில் கலாச்சார முதிர்ச்சியில் தேர்ந்த பிறகும் கூட அந்த மாயைகளிலிருந்து விடுபடாமல் மேலும் மேலும் அதிலேயே திழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவின் தொனமை வேதங்களான ரிக் யஜூர்  சாம வேதங்கள் உருவ வழிபாட்டிற்கு எதிரானவை. அத்வைத கோட்பாடு பிரம்மம் உருவற்றது என்கிறது. பண்டைய சித்தர்களும். இப்போதைய ராம் மோகன்ரம், வள்ளலார், தயானந்த சரஸ்வதி போன்றவர்களும் உருவ வழி பாட்டை மறுப்பவர்களே. ஸ்தூல வடிவில் தெய்வச் சிலையும் அது குடியிருக்க கோயிலும் வேத்த்தில் இல்லாதது என இந்திய தத்துவ இயல் அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவின் பண்டைய பாரம்பரியமே அரபுலகில் இஸ்லாமாக எழுச்சியுற்று திரும்பியிருக்கிறது. இந்திய மக்கள் கற்பொழுக்கத்திலும் கருணை மிக்க வாழ்விலும் நாட்ட முள்ளவர்கள் இஸ்லாம் என்பது அவர்களது வாழ்வோடு மிக நெருக்கமானது. இந்த எதார்த்தங்களை எளிதாக புரிய வைக்க தர்ஹாக்கள் துணை செய்வது போல வேறெதுவும் எளிதாக இருக்க முடியாது/

மக்களை நீங்கள் தேடிப் போக வேண்டியதில்லை. பிரசுரங்களை நீட்ட வேண்டியதில்லை, கேள்வி பதில்களை பதிவு செய்ய வீடியோகிராபர்களை அலைய விட வேண்டியதில்லை. முஸ்லிம்களை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது துயரங்களோடும் பிரச்சினைகளோடும் வருகிறார்கள். அவர்களை அங்கு கொண்டு சேர்ப்பதற்கு அரசு பேருந்துகளை இயக்குகிறது. இரயில் வசதி செய்து கொடுக்கிறது. சாலைகள் செப்பனிடப்படுகின்றன.

பக்குவமாகவும் முறையாகவும் செயல்பட்டால் இஸ்லாமின் நன்மகளை எடுத்துச் சொல்ல இதைவிட சிறப்பான தளம் வேறு ஏது?

ஒரு நாள் ஏர்வாடியில் செய்யது இபுறாகீம் ஷஹீத் வலியுல்லாஹ்வின் அடக்கதலத்திற்கு இடது புறமுள்ள மணல் வெளியில் நின்று கொண்டிருக்கிறேன். ஆறுதல் தேடியும் அடைக்கலம் நாடியும் நூற்றுக்கணக்கானோர் அந்த மணற்பரப்பில் திரண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவுவதற்கோ ஆறுதல் சொல்லவோ, என்னெ செய்ய வேண்டும் என்று உள்ளச் சுத்தியோடு  வழி காட்டவோ யாரும் இல்லை

இங்கு வருகிறவர்கள் இறைநேசரின் மேல் கொண்ட மரியாதையில் வருகிறார்கள். முஸ்லிம்களின் மீதான அதிருப்தியோடு திரும்புகிறார்கள் என்றார் ஒரு நணபர். இது எவ்வளவு தூரம் சரி என்பது ஆய்வுக்குரியதாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிஜம்  காஜா முஈனுத்தீன் சிஸ்தியின் அக்கறையோடு உழைப்பவர்கள் இரண்டு பேர் இவர்களிடையே சுற்றி வந்தால் இந்தியாவில் புதிய மாற்றங்களுக்கு தர்ஹாக்கள் தலைவாசலாக இருக்கும்.

இலட்சக்கணக்கான மக்கள். தாமாக முன்வந்து மரியாதை செலுத்த வருவது ஒரு தனிமனிதருக்கு காட்டும் பக்தி என்று பார்க்காமல் அவரது இஸ்லாமிய வாழ்வுக்கும்,  சமுதாயப் பணிகளுக்கும், அவரால பெற்ற நனைக்கும் தருகிற மரியாதையே என்ற கண்ணோட்ட்த்தோடு தர்ஹாக்களைப் பார்க்க்கிற மனோநிலை சமுதாயத்தில் வளருமானால், அது இஸ்லாமின் ஈர்ப்பு சக்தியாக விளங்கிய நல்லடியார்களை அவர்களது மறைவிற்குப் பின்னரும் இஸ்லாமை நோக்கி மக்களை திரட்ட பயன்படும்.
அவ்வாறு பயன்பட வேண்டுமானால்
·         தர்ஹாக்களை இஸ்லாத்திற்கு எதிரானதாக காட்டும் முட்டாள தனத்திற்கு முதலில் முடிவு கட்டிவிட வேண்டும். அனாச்சாரங்களை சீர் செய்வது அதிருப்தி வழியில் ஒரு போதும் சாத்தியமாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
·         இறைநேசர்களை உண்மையாக மதிப்பிடவும் மதிக்கவும் வேண்டும்.
·         அவர்கள் எப்படி இஸ்லாத்தை மக்களின் இதயத்திற்கு அருகே கொண்டு சென்றார்கள் என்ற வழி முறைகளை ஆயவு செய்யவும் அந்த வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டும்.
தர்ஹா வழிபாடு என்ற சொல்லில் சிறு மாற்றம் செய்து தர்ஹாக்களில் அடக்கமாகியிருப்போர் காட்டும் வழிக்கு வழிப்ப்படுவது என திருத்திக் கொள்வது குறித்து சமுதாயம் யோசிக்குமானால் தஃவாவிற்கான எதார்த்தமான வழிகள் ஏராளமாக திறக்கும்.
இன்னொரு முறை ஏதாவது ஒரு தர்ஹாவை கடந்து செல்லும் போது அந்த நல்லவருக்கு ஒரு சலாமை சொல்லி விட்டு இது பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!  5 கோடி தேவையில்லை. இவர் என்ன சாதனை செய்தார் என்று ஒரு ஐந்து நிமிடம் யோசியுங்கள் மாற்றங்களுக்கான வழிகள் அந்த நிமிட்த்திலிருந்து ஆரம்பமாகும்.

2 comments:

Anonymous said...

அற்புதமான தகவல். வாழ்த்துக்கள்.

meeyan salman faris said...

alhamdhulillah miga arumaiyaana vishayam allah eangalukku neir vali kaatuvanaga aameen