Thursday, July 17, 2014

ஜகாத் பைத்துல்மால்



(சென்னை ஜமாத்துல் உலமா மலரில் வெளியான கட்டுரை ஆலிம்களின் பயானுக்காக சில மாறுதல்களுடன். )


இஸ்லாம் இந்த மன்னுக்கேற்ற மாற்றம் நூலில் வலம்புரிஜான் எழுதினார்.
எல்லாச் சமயங்களும் தர்மத்தை ஆதரித்தன. ஆனால் அதை வலியுறுத்தி கடமையாக்கிய சமயம் இஸ்லாம் ஒன்றுதான்.

மேம்போக்கான ஒரு பார்வையில் இஸ்லாத்தை பெருமைப் படுத்தும் இக்கருத்து சரியாகத் தோன்றினாலும் இதிலுள்ள உண்மையையும் பெருமையை இன்னும் சற்று ஆழமாக தேடவேண்டும்.

இங்கு தர்மம் என்று குறிப்பிடப்படுகிற ஜகாத் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கடமை அல்ல. இஸ்லாத்திற்கு முந்தை தெய்வீக சமயங்களிலும் ஜகாத் ஒரு கட்டாய கடமையாகவே வலியுறுத்தப் பட்டு வந்துள்ளது.

அல்பகரா அத்தியாயத்தின் 83 வது வசனம் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தை கொடுத்து வர்ருங்கள் என யூத சமுதாயத்திடம் உறுதி மொழி பெறப்பட்ட்தாக கூறுகிறது.

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىوَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ

ஆலு இமரானின் 13 வது வசனத்தின்  إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ என்ற வாசகத்துக்கு பொருள் சொல்லுகிற போது திருமறை விரிவுரையாளர்கள். அல்லாஹ்விடமிருந்து மனித குலத்திற்கு வந்தது ஒரே ஒரு மார்க்கமே! அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளும் அடிப்படை வழி பாட்டு வாழ்வியல் சட்டங்களும் ஒன்றாகவே இருந்தன. கால மாற்றத்திற்கு ஏற்ப சில பிரிவுச்சட்டங்கள் மட்டுமே மாற்றம் கண்டன என்று கூறுகிறார்கள். இந்தக் கருத்தின் அடிப்படையில் பாக்கிற போது ஜகாத் என்ற இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையான சட்டமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட கடமை அல்ல, ஒரு தொன்மையான சட்ட்த்திற்கு புதிய வடிவத்தையும் வசீகரத்தையும் மட்டுமே அவர்கள் வழங்கினார்கள் என்பது தெளிவாகிறது.

அப்படியானால் ஜகாத் விசயத்தில் இஸ்லாம் செயத புதுமை என்ன? முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் நிகழ்த்திய சாதனை என்ன என்ற கேள்வி எழுகிறது? இந்தக் கேள்விக்கான விடையில் தான் முஹம்மது நபி உருவாக்கிய முஸ்லிம் உம்மத்தின் உன்னதம் அடங்கியிருக்கிறது.

இன்றையை யூத கிருத்துவ சம்யத்தின் இறை வழி பாட்டு முறைகள் எதுவும் அவர்களுக்கான இறைத்தூதர்களால் சொல்லித்தரப்பட்டதல்ல. அவர்களுக்கு உண்மையாக தரப்பட்ட உத்தரவுகளை அம்மக்கள் கை கொள்ளவே இல்லை. சம்யப் பெயருக்கும் தூதர்களுக்கும் உரிமை கோரிய அவர்கள் உண்மையான சமயத்தின் நம்பிக்கைகும் கட்டளைகளுக்கும் கட்டுப்படவே இல்லை. தூதர்களின் காலத்திலும் தூதர்களுக்குப்பிறகும் பின்னரும். அதனால் அவர்களுக்கு சொல்லப்பட்ட உத்தரவுகள் காற்றில் கரைந்து காணாமல் போய்விட்டன.. உத்தரவுகள் தரம் குறைக்கப்பட்டு விரும்பினால் செய்யலாம் என்ற வகையில் நற்குணங்களாக மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டன. ஜகாத் விசயத்திலும் இந்த விபரீதமே நிகழ்ந்த்து. கடமை விருப்பமாகவும் கருணையாகவும் தடம் மாறியது. எனவே   மற்ற சமய்ங்களிலும் ஜகாத் கடமையாக்கப் பட்டே இருந்த்து ; அச்சமூக மக்கள் தமது வழிபாட்டுக் கடமைகள் அனைத்தையும் கை விட்ட்து போல ஜகாத் எனும் கடமையையும் தவறவிட்டு விட்டனர்.

உலக வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்களது ஆற்றல் மிக்க மகத்தான பணிகளில் ஒன்று அவரது சமூகத்திற்கான கட்டளைகளை அவர் நடை முறைப்படுத்தினார். அவற்றில் கூடுதல் குறைவு ஏற்பட்டு விடாமல் உலகின் இறுதித்துளிவரை அவை கடை பிடிக்கப்படுவதற்கான ஏற்பாட்டையும் செய்தார் என்பதாகும் .

ஜகாத் விச்ய்த்தில் முஸ்லிம் சமூகத்தின் சிறப்பு எதில் என்றால்?  தர்மம் என்ற கடமைய அவர்கள தளர்வுபடுத்தி விடாமல் கடமையாகவே இதுவரை காத்து வருகிறார்கள் என்பதில் தான்! அந்தக் கடமையும்  எந்தெந்த வருமானங்களில் ஜகாத் அன்று கணிக்கப்பட்ட்தோ அவற்றிலும் அது மாதிரியான இன்றைய வளர்ச்சியிலும் துல்லியமாக ஜகாத் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு புதிய அம்சத்திலும் 14 நூற்றாண்டுகளுக்கு முந்தை அதே அடிப்படைகள் பின்பற்றப் படுகின்றன. வியர்வை சிந்திய வியாபார வருமானமும் காகிதங்களில் நடக்கிற கணிணி வழி வருமாணமும் ஜகாத்தில் கை கோர்த்துச் செல்கின்றன.

இன்றைய நவீன வருமான வழிகளில் ஜகாத் துல்லியமாக அலசப்படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் இரு வகையாக இருக்கின்றனர். ஒரு கம்பனியின் பங்குதாராக அதன் ஏறத்தாழவுகளில் பொறுப்பேற்கும் மனோ நிலையில் பங்கு வைத்திருப்பவர்கள். இவர்கள் உண்மையான பங்குதார்ர்ரகள். இத்தகையோ தமது முதலீட்டிற்கும் ஜகாத்தை கொடுக்கிற போது கம்பெனியின் நிலம் மிஷினரிகளுக்கான தொகையை கழித்துக் கொண்டு மீதிக் கையிருப்புக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது.

இன்னொரு வகை ஷேர் ஹோலடர்கள் கம்பனியில் முதலீடு செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருக்காது. ஷேர்களை வாங்கி விற்பதில் இலாபம் பார்ப்பது மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருக்கும். இத்தகையோ மொத்த முதலீட்டிற்கும் ஜகாத்தை கணித்துக் கொடுக்க வேண்டும் என்று பழமையான சூத்திரங்களின் அடிப்படையில் சட்டம் வகுத்துச் சொல்லப்படுகிறது.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வழி பாட்டு உத்தரவாக சொல்லப்பட்ட ஒரு கடமை இன்றைய நவீன் பொருளாதார பிரிவுகளுக்குள் உடுறுவிப் பாய்வது முஸ்லிம் உம்மத் இந்தக் கடமை வாழையடி வாழையாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் காட்டிய அக்கறையை பிரதிபலிக்கிறது.

லைலத்துல் கத்ர் அன்று வழங்கமாக ஜகாத் வழங்க பையில் பணக்கட்டுகளை கொண்டு வருகிற ஓரு வியாபாரி கடந்த ஆண்டு பண்ப்பையை மகனிடம் கொடுத்து ஆட்களை தேடிப்பார்த்து கொடுக்குமாறு மகனிடம் சொன்னார். அந்த இளைஞன் கூச்சத்தோடு பணப்பையை காலி செய்த்தை நான் எப்போதும் நினைத்துக் கொள்கிறேன், ஒரு கடமையை தலைமுறைக்கு கட்த்திக் கொண்டு போகிற என்ன அற்புதமான நடைமுறை பாருங்கள்!
  
இதில் முஸ்லிம் உம்மத்தின் இன்னொரு சிறப்பு ஜகாத்தை வழங்குவதில் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய ஆர்வம் இன்னும் மெருகு குலையாமல் இருக்கிறது. நான் எதிலெல்லாம் கொடுக்க வேண்டும் என்று எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தேடித்தேடிப் பார்க்கிறார்கள் முஸ்லிம் செல்வந்தர்கள். ஓடி ஒளிந்து கொள்ளவே ; கடத்திப் பதுக்கி வைக்கவோ இந்த உம்மத் நினைத்தும் பார்ப்பதில்லை. அரசாங்கத்திடம் காட்டாத கணக்க்களுக்கு கூட அசராமல் ஜகாத் கொடுத்து விடுகிறார்கள்,

ஜகாத் ஒரு சிறு அறிமுகம்.

பெருமானாரின் ஹிஜ்ரத்திற்கு முந்தைய 8 மக்கீ வசனங்களில்  ஜகாத் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது இஸ்லாமிய பிரச்சாரத்தின்  தொடக்கத்திலிருந்தே தர்மத்தை அறிவுறுத்தி வந்தார்கள் என்பதையும், ஜகாத் என்ற வார்த்தையிலேயே அது ஊக்குவிக்கப் பட்டது என்பதையும் இது காட்டுகிறது.

ஜகாத் என்ற அரபுச் சொல்லுக்கு அகராதிப்படி தூய்மை வளர்ச்சி என்ற இரண்டு பொருட்கள் பிரபலமாக சொல்லப்படுவதுண்டு.

ஹிஜிர் 4 ம் நூற்றாண்டைச் சார்ந்த அரபு மொழி வல்லுனரும் திருக்குர் ஆனின் அருஞ்சொல் திரட்டு வழங்கிய  அறிஞருமான் இமாம் ராகிப் இஸ்பஹானி எல்லா வளர்ச்சிக்கும் ஜகாத் என்று சொல்லப்படுவதில்லை. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து பெருகுகிற ஆத்மீக வளர்ச்சிக்கே ஜகாத் என்று கூறப்படும் அதே போல எல்லா சுத்தத்திற்கு ஜகாத் என்று சொல்லப்படுவதில்லை ஆத்மீக சுதத்திற்கே அவ்வாறு சொல்லப்படும் என்று கூறுகிறார்.

ஹ்ஜிரி இரண்டாம் ஆண்டுக்கு முன் பொதுவான அனைத்து தர்மங்களுக்கும் ஜகாத் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. ஹ்ஜிரி இரண்டில்  கட்டாய தர்மம் என்ற திட்டம் குறிப்பிட்ட வடிவத்தில் அமுல் படுத்தப் பட்ட பிறகு ஜகாத் என்ற வார்த்தை கட்டாய தர்மத்தையும் சதகா எனும் சொல் உபரியான தர்மகாரியங்களையும் குறிப்பாக உணர்த்தி நின்றன. 

இன்றிலிருந்து 15 நூற்றாண்டுகளுக்கு முன் படிப்பறிவற்ற ஒரு பாமர அரபுச் சமூகத்தில் ஜகாத் என்கிற தர்மம் இனம் பிரித்து வகை பிரித்து பல் வேறு உட்கூறு நிபந்தனைகளுடன் பேசப்பட்ட விதமே மெய் சிலிர்க்கச் செய்கிறது.

ஜகாத் யார் கொடுக்கனும்?   எந்த சொத்துக்கு எவ்வளவு கொடுக்க வெண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்?  யாருக்கு கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்?  கொடுக்காவிட்டால் என்ன? .என்ற 7 தலைப்புக்களுக்கான பிரதான செய்திகளும் அதற்கான நியாயங்களும். இவற்றின் உட்பிரிவு சட்டங்களும் விதி விலக்குகளும் படிப்பதற்கே பிரம்மிப்பூட்டுகிறது என்றால் இவற்றை வெற்றிகரமாக அமுல்படுத்திக் காட்டிய முஹம்மது நபிகள் நாயகத்தின் சாதனையை என்ன வென்பது?

பெருமானார் (ஸல்) அவர்களது மதீனா பயணத்திலிருந்து தொடங்குகிற ஹிஜ்ரி காலண்டரின் முதல் நூற்றாண்டின் முடிவில் உலகின் மாபெரும் வல்லரசாகப் பரவி இருந்த இஸ்லாமிய பேரரசின் நிலை எப்படி இருந்த்து என்பதை யஹ்யா பின் ஸஈத் கூறுகிறார். அதிபர் உமர் பின் அப்துல் அஜீஸ் என்னை ஆப்ரிக்காவின் ஜகாத்தை வசூலிக்க அனுப்பினார். நான் வசூலித்த தொகையை கொடுப்பதற்காக ஆட்களை தேடினேன், ஒரு ஏழை கூட கிடைக்கவில்லை.. கலீபா உமர் மக்களை அனைவரையும் செல்வந்தர்களாக ஆக்கியிருந்தார். இறுதியில அந்த தொகையில்  அடிமைகளை விலைக்கு வாங்கி விடுதலை செய்தேன்.
  • فقد روي عن يحيى بن سعيد قوله (بعثني عمر بن عبد العزيز على صدقات افريقيا فاقتضيتها وطلبت فقراء نعطيها ايها لهم فلم نجد فيها فقيرا ولم نجد من يا خذها منا وقد اغنى عمر بن عبد العزيز الناس فاشتريت بها رقابا فأعتقتهم)

இன்றைய உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் ஒன்று கூடி ஒரு நூறாண்டுகள் மூளையை கசக்கி யோசித்தாலும் அதை நிறவேற்ற சக்தி வாய்ந்த வல்லரசுகள் கங்கணம் கட்டி களத்தில் இறங்கினாலும் ஜகாத்தை போல ஒரு அருமையான பொருளியல் பரவல் திட்டத்தை தயாரிக்க முடியாது.

வர்க்க பேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஜகாத்தை நடைமுறைப் படுத்தி போல ஒரு திட்ட்த்தை நடைமுறைப்படுத்தவும் யாராலும் இயலாது.

சிந்திக்க சிந்திக்க பிரமிப்பு அகலாத ஜகாத் எனும் கடமையின் நுட்பமான அம்சங்கள் அலசுவதற்கும் ஆய்வதற்கும் ஏராளம் இருக்கின்றன.

ஜகாத் யார் மீது கடமை ?
இதே கருத்தை இன்னொரு வார்த்தையில் இஸ்லாமியப் சமூகத்தில் செல்வந்தன் யார்? என்றும் கேட்கலாம்.
இந்தக் கேள்வியின் பின்னணியில் ஒரு முக்கிய விவாதம் அடங்கியிருக்கிறது.

ஒரு மனிதருடையை அடிப்படைத் தேவைகள் நிறைவேறியது போக கடனில் பாதிக்கப்படாத நிலையில் ஒரு ஆண்டு முழுவதும் 84 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி அல்லது நாற்பது ஆடுகள் அல்லது முப்பது மாடுகள் அல்லது 5 ஒட்டகைகள் அல்லது 653 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்க கூடிய தானியம் அல்லது அழுகிப் போகாத பொருட்களின் விவசாயம்அல்லது அதற்கு நிகரான பணம் ஒருவரிடம் இருக்கும் என்றால் அவர் மீது ஜக்காத் கடமையாகும்

விவசாயப் பொருட்கள் ஆடு மாடு ஒட்டகைகளை தவிர்த்து தவிர மற்ற வற்றில் நாறபதில் ஒன்று என்ற சதவீத்த்திலும் விவசாய நிலங்களில் சாகுபடி முறைகளைப் பொருத்து மானாவாரி நிலமாக இருந்தால் விளைச்சலில் பத்தில் ஒரு சதவீத்த்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும். நீர்ப்பாச்சுவதற்கான முயற்சிகள் செய்யப்படுகிற நிலங்களில் மகசூலில் 5 சதவீதமும் ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.

விவசாயத்தை பொருத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை என்றில்லாமல் ஒவ்வொரு அறுவடையின் போதும் செலவுவகைகளை கழித்து விட்டு மீதியுள்ளவற்றிலிருந்து கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.
ஆடு மாடு ஒட்டகைகளில் எவ்வளவு என்பது ஒவ்வொரு இனத்திற்கும் தனியாக விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 40 முதல் 120 ஆடுகள் வரை இருந்தால் ஒரு ஆடு ஜகாத்தாக கொடுக்க வேண்டும் என்றும், 121 முதல் 200 வரை 2 ஆடுகள் கொடுக்க வேண்டும் என்றுமான அமைப்பில் விதிகள் கூறப்பட்டுள்ளன. 

இதன் ஒவ்வொரு பகுதிக்கும் சில் துணை விதிகளும் விதி விலக்குகளும் உண்டு. அவை கட்டுரையை நூலாக மாற்றி விடக்கூடியவை,

இதில் நாம் விவாத்த்திற்கு எடுத்துக் கொள்வது இன்றைய நடைமுறையில் இருக்கிற பணம் வியாபாரப் பொருட்களுக்கள் மற்ற பட்டியலிடப்படாத பொதுவான சாதனங்களுக்கு எதை அடிப்படையாக கொள்வது என்பதையாகும்.

612 கிராம் வெள்ளிக்கு நிகரான பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும் அதாவது 30.600 முப்பதாயிரத்து அறுநூறு ரூபாய் ஒருவரிடம் ஒரு வருடம் முழுவதும் அதிகபடியாக (செலவுகள் கடன் மற்ற தேவைகள் போக எக்ஸ்டிராவக இருக்குமானால் இதற்கு நிகரான வியாபார பொருளாக இருக்குமானால் அவர் மீது ஜகாத் கடமையாகும்.


பைத்துல் மால்  

பைத்துல் மால் என்ற பெயர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்திலிருந்து இஸ்லாமிய வழக்கத்தில் இடம் பெறுகிறது. இதற்கு பைத்து மாலில் முஸ்லிமீன் முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களின் களஞ்சியம்என்றும் பைத்து மாலில்லாஹ் அல்லாஹ்வின் சொத்துக்களின் களஞ்சியம் என்றும் இரண்டு பொருட்கள் சொல்லப்படுவதுண்டு. இரண்டும் பொதுச் சொத்து என்ற கருத்தை தாங்கி நிற்கின்றன,

பைத்துல் மால் என்ற வார்த்தைக்கு சரியான கருத்து இஸ்லாமிய அரசின் கஜானா என்பதாகும். ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிற தொகைகள் அனைத்தும் பைத்துல் மாலில் வைக்கப்படும். ஜகாத் , ஹராஜ் - என்கிற நிலவரி  யுத்தங்களிலிருந்து கிடைக்கிற வெற்றிப் பொருட்களான  கனீமத் பொருட்கள், அதில் ஆட்சியாளருக்கு ஒதுக்கப்படுகிற கும்சு என்ற ஐந்தில் ஒரு பங்கு, சமாதான உடன்படிக்கைகள் வழியாக கிடைக்கிற பைஉ என்கிற வரவுகள், மாற்றுமத்தவரிடமிருந்து கிடைக்கிற ஜிஸியாக்கள், அரசாங்கத்தின் பொதுச் சொத்த்துக்கள், உரிமையாளன் இன்றி கைவிடப்பட்ட பொருட்கள் , வக்பு சொத்துக்கள் அனைத்தும் பைத்துல் மால் என்ற அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். இதில் அரசரின் தனிப்பட்ட கொடைகளுக்கான தொகை பைத்து மாலில் காஸ் (بيت مال الخاصة (   என்று குறிப்பிடப்படும்.

ஆரம்ப காலத்தில் பைத்துல் மால் பள்ளிவாசலை ஒட்டிய பொது இட்த்தில் அனைவருடைய கண்காணிப்பிலும் இருக்கிற வகையில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாப்பான தனிக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த பைத்துல் மாலிலிருந்து அதிகாரிகளுகான சம்பளம், இராணுவச் செலவுகள், அணைகள் பாலங்கள் கட்டுவது போன்ற நகரமைப்புத் திட்டங்கள் பள்ளிவாசல்கள் கல்விக்கூடங்கள் மருத்துவ மன்னகள் சிறைக்கூடங்கள் போன்ற சமூக நலத்திட்டங்கள்,ஏழைகள் நலிந்தவர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்படும்.

உமர் ரலி அவர்கள் காலத்தில் சிரியா இராக் எகிப்து ஆர்மீனியா ஆஜர்பைஜான் போன்ற பகுதிகளிலிருந்து குவியல் குவியலாக பொருட்கள் அரசாங்க கஜானாவிற்கு வந்த போது அழுத படியே அவற்றைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அவற்றை பைத்துல் மாலில் சேர்த்து, ஒரு வருடத்தில் திரள்கிற தொகை அனைத்தையும் அந்த வருடத்திற்குள்ளாகவே செலவு செய்திட உத்தரவிடுவார்கள் என்று இப்னுல் ஜவ்ஸி மனாகிபு அமீரில் முஃமினீன் உமர் பின் கத்தாப் என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

ஹஜ்ரத் அலி (ரல்) அவர்கள் ஒரு வாரத்தின் வரவுகளை அந்த வாரத்திற்குள் செல்வு செய்திட உத்தரவிடுவார்கள் என்று அபுல் அப்பாஸ் அந்நாஸிரி அல் இஸ்திக்ஸா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

பைத்துல் மாலின் தொகைகளில் எது எந்த விசயத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்? என்பதை தெரிவிப்பதற்காக பைத்துல் மாலிற்கான வழிகாட்டிகளாக சட்ட அறிஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை கூபாவின் ஆளுநராக நியமித்த போது பைத்துல் மால் விசயத்தில் அவருக்கு ஆலோசகராகவும் அமைச்சராகவும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களை நியமித்தார்கள் என்று இப்னு ஸஃது தனது தபகாத்துல் குப்ராவில் குறிப்பிடுகிறார்.

فقد عين عمر بن الخطاب عمار بن ياسر على إمارة الكوفة، وبعث معه عبد الله بن مسعود على بيت المال، وجعله "مُعلِّمًا ووزيرًا

பைத்துல் மாலில் பல தரப்பட்ட பொருட்கள் வந்து  சேர்கிற காரணத்தினாலும் ஜகாத் போன்ற உதவிகள் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதனாலும் ஹனபி மத்ஹபின் சட்ட அறிஞர்கள் பைத்துல் மால் அமைப்பை நான்கு பிரிவுகளாக பிரித்தனர்.
1.   தர்மங்களுக்கான பைத்துல் மால் بيت المال الخاص بالصدقات)
2.   வரிகளுக்கான பைத்துல் மால் ( بيت المال الخاص بحصيلة الجزية والخراج)
3.   வெற்றிப் பொருட்களுக்கான பைத்துல் மால் بيت المال الخاص بالغنائم
4.   அநாமத்துப் பொருட்களுக்கான பைத்துல் மால் بيت المال الخاص بالضوائع
(المبسوط: 3/18) qaradawi.net

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கணக்குகள் வைக்கப்பட்டு அதற்குரிய பயனீட்டாளர்கள் முடிவு செய்யப்பட்டனர்.

பைத்துல் மாலுக்கான தொகைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் கலீபாக்கள் காலத்திலும் ஆட்கள் அனுப்பி  வசூலிக்கப்பட்ட்தை நபிமொழிகள் உறுதிப்படுத்துகின்றன.

அபூசாலிஹ் (ரலி)  அவர்கள் தம்மீது ஜகாத் கடமையான போது ஸஃது பின் அபீவக்காஸ், இப்னு உமர், அபூஸஈத் அல்குத்ரி அபூஹுரைரா (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் எனது ஜகாத்தை நானே நேரடியாக கொடுப்பதா? அல்லது ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பதா என்று கேட்ட போது அவர்கள் அனைவரும் ஆட்சியாளர் மீது குறை கூறப்பட்டாலும் கூட  ஆட்சியாளரிடமே ஒப்படையுங்கள் என கூறினர்.

இதுவும் இதுமாதிரியான மற்ற பல தகவல்களை தருகிற இஸ்லாமிய மூலங்களும்  இஸ்லாமிய நாட்டில் ஜகாத் கட்டாயமாக வசூலிக்கப்பட்டால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பது கடமை என்பதை மட்டுமே சுட்டி நிற்கின்றன. ஆட்சியாளர் தம்மிஷ்டத்திற்கு செயல்படுபவராக இருந்தாலும் கூட அவரிடமே ஜகாத் நிதியை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்து விட்டால் ஜகாத் கடமையானவரின் பொறுப்பு நீங்கிவிடும் என்றும் அத்தகவல்கள் கூறின.

அதே நேரத்தில் ஜகாத் கூட்டாதக்கத்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிற எந்த சமிக்ஞையும் இஸ்லாமிய மூலங்களில் இல்லை. ஷாபி மதஹபின் சட்ட நூலான முஜ்னியில் சதகத்துல் பித்ரின் அளவைப் பற்றிய பாட்த்தில் இப்னு உமர் (ரலி)யின் பிரதான சீடரான ஸாலிம் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் இபுனு உமர்(ரலி) ஜகாத்தை அரசரிடமல்லவா கொடுப்பார் என்று கேட்க அதற்கவர். ஆம்! ஆனால் நான் அவரிடம் கொடுக்கமாட்டேன் என்று கூறியதாக ஒரு செய்தி இடம் பெற்றிருக்கிறது.
سأل رجل سالما فقال ألم يكن ابن عمر يدفعها إلى السلطان ؟ فقال: بلى، ولكن أرى أن لا يدفعها إليه

அரசரின் சார்பாக ஜகாத் வசூலிக்கப்படுகிற நிலையிலும் தனியாக ஜகாத்தை கொடுத்தால் அது செல்லும் என்பதை இது காட்டுகிறது.

திருக்குர் ஆனில் 27 இடங்களில் ஜகாத் தொழுகையுடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. தொழுகையை எப்படி கூட்டாக நிறவேற்ற வேண்டுமோ அப்படித்தான் ஜகாத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் வாதிக்கின்றனர். இரண்டு காரணங்களால் அது சரியல்ல.

தொழுகையை கூட்டாக நிறைவேற்ற வலியுறுத்தும் தெளிவான நபி மொழிகள்  ஏராளம் உண்டு. ஜகாத் தொடர்பாக அப்படி தெளிவான அறிவிப்புக்கள் எதுவும் இல்லை

தொழுகையை கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தாலும் அது தனிக்கடமையே! ஜமாத்துடன் நிறைவேற்றப் பட்டால் சிறப்பு என்பதும் அவ்வாறு நிறைவேற்றப்படாவிட்டால் தனியாக தொழ வேண்டும் என்பதும். ஒரு ஜமாத் தொழுகை நடைபெற்ற மஹல்லாவில் ஒருவர் தனியாக தொழுதால் அது கூடும், ஒரு வர் தனது வீட்டில் தனது குடும்பத்தினரை சேர்த்து வைத்துக் கொண்டு ஜமாத்தாக தொழுதால் அது கூடும் என்றுதான் இஸ்லாமிய சட்டவியல் கூறுகிறது.

எனவே தொழுகையுடன் ஒப்பிட்டு ஜகாத்தை கூட்டாக நிறைவேற்றுவது சிறப்பு என்று கூறினால் அது பொருத்தமானது. கூட்டாகத்தான் நிறைவேற்ற வேண்டும் இல்லை எனில் ஜகாத் செல்லாது என்று சொல்வது இஸ்லாமின் சட்டங்களுக்கு இயல்புகளுக்கும்  மாற்றமானது ஆகும்.

ஜகாத்தை பைத்துல் மால்கள் மூலம் நிறைவேற்றுவது சிறப்பு என்பதும் அவ்வாறு நிறைவேற்றினால் ஜகாத் கொடுத்தவரின் கடமை முடிந்து விடும் என்பதும் இஸலாமிய ஆட்சி நடை பெறக்கூடிய பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகும். முஸ்லிம்களின் பொறுப்பாளியாக அரசர் இருப்பதால் அவர் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அவர்களது ஜகாத்தை செலவிட அதிகாரம் பெற்றவர் என்கிற வகையில் இது சாத்தியமாகிறது.

இஸ்லாமிய அரசு நடைபெறாத இடங்களில் பைத்துல் மால் சட்டபூர்வமானதாக ஆகாது. அந்த பைத்துல்மால்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இல்லை. அது மட்டுமல்ல அத்தகைய பைத்துல் மால்கள் மூலம் ஜகாத் நிறைவேற்றப்பட்டால் அது முறையாக செலவிடப்பட்டதா என்பதை அறியாத வரை ஒருவர் தமது ஜகாத் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார் என சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் கூட இப்போது ஜகாத்தை வசூல் செய்து விநியோகிக்கும் சட்டபூர்வ அமைப்புக்கள் இல்லை. இந்நிலையில் மக்கள் தமது விருப்ப்ப்டியே ஜகாத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

எகிப்தில் ஜகாத்தை வசூல் செய்யும் சட்ட பூர்வ அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் தலைமை முப்தி நஸர் பரீத் வாஸில் முன்வைத்த போது  வருவாய்த்துறை தலைமை அதிகார் அஷ்ரபுல் அரபி ஜகாத் விநியோக முறையில் உள்ள நுட்பங்கள் காரணமாக திட்டம் நல்லது என்றாலும் தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்று மறுத்துவிட்ட்தாக பத்ரிகை செய்திகள் கூறுகின்றன. எனினும் அரசு சார்பு வங்கிகள் சிலவும் தனியார் அமைப்புக்களும் ஜகாத்தை பெற்று விநியோகித்து வருகின்றன என பத்ரிகை தக்வல்கள் கூறுகின்றன.

சேவை அமைப்புக்கள் ஜகாத் வசூலிக்கலாமா ? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்ற தலைப்பில் அர்ரியாழ் அரபுப் பத்ரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்த்து. அதில் ஷைக் அப்துல்லாஹ் சுலைமான் அல் மனீஃ இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 أن إذن ولي الأمر أو ترخيصه للجمعية ليس كتكليفها من قبله بجباية الزكاة ولهذا لا تعتبر الجمعية نائبة عن ولي الأمر ولا وكيلة عنه، ولهذا لا يلزم المزكي الاستجابة لطلب الجمعية وإن دفع زكاته إليها فهي وكيلة عنه في صرفها في مصارفها الشرعية ولا تبرأ ذمة المزكي في دفعها إلى الجمعية حتى يجري من الجمعية صرفها في مصارفها الشرعية

நற்சேவை செய்யும் ஒரு அமைப்புக்கு அரசர் ஜகாத்தை வசூலிக்க அனுமதி கொடுப்பதோ அல்லது சலுகை அளிப்பதோ ஜகாத்தை வசூலிக்கும் அவ்வமைப்புக்கு அரசர் பொறுப்பேற்றுக் கொண்ட்தாக அர்த்தமாகாது. ஆகையால் அவ்வமைப்பை அரசரின் பிரதிநிதியாகவோ வக்கீலாகவோ கருத முடியாது. அதனால் தான் ஜகாத் கொடுப்பவர்கள் அமைப்புக்களின் அழைப்புக்களுக்கு கட்டுப்பட வேண்டிய கடமையாவதில்லை. ஒரு வேளை அமைப்புக்களிடம் ஜகாத்தை கொடுத்து விட்டால் அவை சரியான் விதங்களில் செலவிட்டனவா என்பதை உறுதி செய்யாத வரை ஜகாத் கொடுப்பவரின் கடமை நீங்கிவிடாது.”

உணமையான பைத்துல் மால் என்பது இஸ்லாமி ஆட்சி நடைபெறுகிற நாட்டின் அரசுக் கரூவூலமேயாகும். அதுவே ஜகாத்தை வசூலிக்கும் சட்ட பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பாகும். அங்கு ஜகாத்தை கொடுத்துவிட்டால் கடமை நீங்கிவிடும். அது தவிர மற்ற எங்கு பைத்துல் மால் என்ற அமைப்பு செயல்பட்டாலும் அது பைத்துல் மால் என்ற பெயரைச் இரவலாகச் சூடிக்கொண்டே சமூக சேவை அமைப்பே ஆகும், அதற்கு ஜகாத்தை வசூலிக்கும் சட்டபூர்வ உரிமையோ,அதனிடம் ஜகாத்தை கொடுத்துவிட்டால் ஜகாத்தில் நமது கடமை முடிந்து விடும் என்ற சட்ட அந்தஸ்தோ கிடையாது.

சட்ட அறிஞர்கள் இதை இன்னொரு வகையில் விளக்குகிறார்கள். ஒரு சேவை அமைப்பிடம் ஒருவர் ஜகாத் தொகையை வழங்குகிறார். அதை அவ்வமைப்பு தொலைத்து விட்டால் அதனிடம் ஜகாத்தை கொடுத்தவர் தனது கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார். சேவை அமைப்புக்கள் சட்ட பூர்வ அந்தஸ்தை பெற்றவை அல்ல என்பதே இதற்கு காரணம்.

இத்தகைய சூழலில் ஒருவர் தன்னுடைய ஜகாத்தை கொடுப்பதற்கு தகுதியான நபர்களை தானே கண்டறிந்து கொடுத்து விடுவதுதான் சிறந்த் அமைப்பாகும். அவ்வாறு கொடுத்தால் அது செல்லுபடியாகும் என்பது மாத்திரமல்ல அத்தகைய சூழ்நிலையில் ஜகாத்தை பெற்றுக் கொள்ள தகுதி படைத்த எட்டு பிரிவினரில் ஒரு பிரிவான ஜகாத்தை வசூலிப்போர் எனும் பிரிவு குறைந்து போய்விடும் என்று ஷாபி சட்ட நூலான பதஹுல் முஈனில் கூறப்படுகிறது.
ولو فرق المالك الزكاة سقط سهم العامل
ஒருவர் தனது ஜகாத் தொகையை தானே கொடுத்து விட்டால் வசூலகரின் பங்கு விழுந்துவிடும்.

ஜகாத்தை பெற்றுக் கொள்வதற்கு நெருங்கிய உறவினர்களே முதல் தகுதி படைத்தவர்கள். குறிப்பாக சகோதர சகோதரிகள் அவர்களுடைய குடும்பத்தினர். தந்தையின் சகோதர்ர்கள் அவர்களது குடும்பத்தினர் மனைவியின் உறவுக்காரர்கள் பக்கத்து வீட்டுக் கார்ர்கள் தெருவாசிகள் பக்கத்து தெருவாசிகள் என ஜகாத்தை பெறுகிற வட்டம் கொடுப்பவரை நெருக்கமாக வளையம் கொண்டிருப்பதாக சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஷாபி மத்ஹபின் சட்ட நூலான முஜ்னியில் இவ்வாறு கூறப்படுகிற்து.

ويقسمها على من تقسم عليه زكاة المال وأحب إلى ذوو رحمه إن كان لا تلزمه نفقتهم بحال وإن طرحها عند من تجمع عنده أجزأه إن شاء الله تعالى.
ஜகாத் நிதியை பங்கிடப்படுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரிவினர்களிடையே அதை அவர் பங்கிடுவார். அவரது கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த பந்த உறவுகளுக்கிடையே பங்கிடுவது மிகப் பிரியத்திற்குரியது. அவரைச் சூழ்ந்திருக்கிற ஏழைகளுக்கு கொடுத்தாலும் போதுமானதே!

ஜகாத்தை நெருங்கிய உறவினர்களுக்கு கொடுக்கிற போது தரம்ம் செய்த நன்மையும் உறவை பராமரித்த நன்மையும் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உண்மை நில்ல இப்படி இருக்க  ஜகாத் பைத்துல் மால்களின் மூலமாக மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோஷம் சமீப காலமாக எழுப்பப் படுகிறது தமிழகத்தின் ஒரு புதிய கோயபல்ஸாக உருவெடுத்த்டிருக்கிற சாயம் போன அரசியல் வாதி எஸ் எம் ஹிதாயத்துல்லாஹ் என்பவர் இது விசயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். நாலு அர்பி வார்த்தைகளை தெரிந்து கொண்டு அவர் அடிக்க்றி கூத்து சகித்துக் கொள்ள முடியாத அளவில் வளர்ந்து வருகிறது. இவரை இப்படியே தொடர அனும்தித்தால் ஒரு புதிய மிர்ஜாவாக இவர் மாறி விடுகிற ஆபத்து இருக்கிறது. மார்க்கத்தை புரிந்து கொள்வதற்கு காலணா அளவுக்கு கூட அக்கறை செலுத்தாத சில அபாக்கியவான்கள் புரட்சிகரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மேடைகளில் இந்தப் புதிய மிர்ஜாவின் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கின்றனர்.

கொஞ்சம் பணவசதியை பெற்றவுடன் சிலருக்கு மார்க்கத்தில் சுயகருத்துச் சொல்கிற உரிமை வந்துவிட்டதாக ஒரு நினைப்பு வந்துவிடுகிறது. அவர்களுக்கு ஏதாவது ஒரு பொதுக்காரியம் பிடித்துப் போய்விட்டால் அதுதான இஸ்லாத்தின் முதல் கடமை என்ற அளவில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். கொஞ்சம் ஆர்வம் முத்தி விட்டது என்றால் இதை தவிர வேறு எதைச் செய்தாலும் அது இஸ்லாமல்ல என்று பேசத்துணிந்து விடுகின்றனர். தப்லீகில் செல்லாவிட்டால் முஸ்லிம் அல்ல. வாழ்வுரிமை போராட்ட்த்தில் கலது கொள்ளாவிட்டால் முஸ்லிம் அல்ல. தாவா பிரச்சாரத்தில் பங்கேற்காவிட்டால் முஸ்லிம் அல்ல என்று அழுத்தமாக பிரச்சாரம் செய்கின்றனர். அந்த வகையில் ஒரு வியாதிதான் ஹிதாயத்துல்லாஹ்வுக்கும் ஏற்பட்டிருக்கிறது. பைத்துல் மாலுக்கு கொடுக்காவிட்டால் அது ஜகாத் அல்ல என்று அரற்றிக் கொண்டிருக்கிறார். உறவினர்களுக்கு கொடுத்தால் அது ஜகாத் அல்ல; தனியாக கொடுத்தால் அது ஜகாத் அல்ல. பைத்துல் மாலுக்கு ஜகாத் கொடுக்காவிட்டால் தொழுகையே செல்லாது; ஜகாத் தொகையில் கடன் கொடுக்கலாம்; இரண்டாவது தடவை ஹஜ்ஜுக்கு போகக் கூடாது எனற அவரது உளறல்கள் ஆலிம்களை அசரடித்து விட்டது.

மூத்த ஆலிம்கள் மயிலறகால தடவிடுவது போல மரியாதையாக விளக்கிச் சொன்னார்கள். இளைய ஆலிம்கள் பலர் இடித்துக் கூறினர். யார் என்ன சொன்னாலும் நான் உங்க்கிட்ட அப்புறம் பேசறேன் என்று அகன்று போய்விடுகிற அரசியல் பேர்வழி தன்பாட்டுக்கு தப்புத்தாளம் போட்டுக் கொண்டிருந்தார். இந்த கிறுக்கு ஓட்டத்தை நிறுத்தியாக வேண்டுமென்ற முடிவில் ஒரு வழியாக தமிழகத்தின் ஒட்டு மொத்த மார்க்க அறிஞர்களும் மாநில ஜமாத்துல் உலமாவின் மூலம் இது பற்றி தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தின் புதிய மீர்ஜாவான எஸ்.எம் ஹிதாயத்துல்லாஹ்வின் பைத்துல் மால் அமைப்புக்கும் அவரது திட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அறிவித்துள்ளனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் பல நகரங்களிலும் சிற்றூர்களிலிம் ஆலிம்கள் ஜமாத்துக்கள் சமூகப் பிரமுகர்கள் பைத்துல் மால்களை நிறுவி தொன்றுதொட்டு இந்த சேவைகளை செய்து வருகின்றனர்,  கல்வி திருமணம் மருத்துவ உதவி போன்ற ஏதாவது ஒரு நோக்கத்தை மையமாக வைத்து அவை செயல்பட்டுவந்தன. சில இடங்களில் வட்டியில்லா கடனுதவி செய்யப்பட்டு வந்தது. மிக்ச்சில இடங்களில் ஆதரவற்றோர் முதியோர் நலத்திட்டங்க்ள் செயல்படுத்தப் பட்டு வந்தன. பெரும்பாலும் இவ்வமைப்புக்கள் ஜகாத் விநியோகத்தில் இறங்கவில்லை. ஜகாத் தொகையை செலவழிக்கத் தகுதியான காரியங்கள் இருக்குமானால் அதற்கு என்று தனியாக அக்கவுண்ட வைத்து ஜகாத் தொகையை நிர்வகிக்த்து வந்தன. ஆனால் இத்தகைய பைத்துல் மால் அமைப்புக்கள் எல்லா இட்த்திலும் இருக்கவில்லை. அதே போல தமிழகத்தில் பெரும் அறக்கட்டளைகளை நிறுவி பைத்துல் மாலின் சேவைகளை செய்தவர்களும் பைத்துல் மால் என்ற பெயரைப் அடையாளப் பெயராக பயன்படுத்தியதில்லை.

இந்த இடத்தில் ஒரு எதார்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மார்க்கத்தின் கடமையாக அல்லது வலியுறுத்தப்பட்ட ஒரு செயலாக இருக்கிற எந்த  ஒரு அம்சமும் முஸ்லிம் சமூகத்தில் வாழையடி வாழையாக அமுல் படுத்தப் பட்டதாகவே  இருக்கும். கத்னாவிலிருந்து உமரா வரை எந்த ஒரு மார்க்க அம்சத்தை முஸ்லிம் உம்மத் தவறவிட்டதில்லை.  இந்த பைத்துல் மால விவகாரமும் அப்படித்தான். பைத்துல் மால் என்பது  கட்டாயமாக வலியுறுத்தப்பட்ட ஒரு அம்சமாக இருந்திருக்கும் என்றால், மஸ்ஜித்கள் தோறும் மதரஸாக்கள் இருப்பது போல பைத்துல் மால்களும் இடம் பெற்றிருக்கும்.

பைத்துல் மால் என்ற அமைப்பு முஸ்லிம் சமுதாயத்தின் உபகார அமைப்பாக ஒவ்வொரு தளத்திலும் இயங்குவது வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில் பைத்துல் மால பெயரைச் சொல்லி இஸ்லாத்தை ஹைஜாக் செய்ய நினைப்பவர்கள் கத்தரிக்கப்பட வேண்டிய களைகளே!


  


  


2 comments:

Mohammed ilyas baqavi said...

அருமையானபதிவு

Mohammed ilyas baqavi said...

Super