Friday, July 30, 2010

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

“சாத்தான் அனுப்பிய அரக்கன் இவன்”– அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் கோபம் கொப்பளிக்க உச்சரித்த இந்த கடுஞ்சொற்கள் இறுதியில் 22 வயது அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனையை பெற்றுத்த்ந்து விட்டன. இந்தியக் குற்ற வழக்கு சரித்திரத்தில் மிக விரைவாக வழங்கப் பட்ட தீர்ப்பு இது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் சதுக்கம், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் ஊள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 25 வெளிநாட்டவர் உள்ளிட்ட 166 பேர் பலியாயினர். 304 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் இந்தியாவின் பிரபல என்கவுனடர் ஸ்பெஷலிஸ்டான ஹேமந்த் கர்கரே உட்பட 14 போலீஸாரும் அப்பாவிப் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்

மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் பலியாயினர். அஜ்மல் காசப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் மும்பை தாக்குதல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வவழக்கில் 17 மாதத்திற்குள்ளாக 650 சாட்சிகளை விசாரிக்கப் பட்டு மே மூன்றாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட்து. அமரிக்க பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட கருவிகளைப் பற்றிய விவரங்களையும் தொலைத் தொடர்புச் சாதன்ங்கள் எப்படிப் பயன்படுத்தப் பட்டன என்பதையும் நிதிபதி மதன் லட்சுமண்தாஸ் தகில்யானிக்கு விளக்கினர். இந்திய நீதிமன்ற வரலாற்றில் அந்நிய நாட்டு சாட்சிகள் விசாரிக்கப் பட்ட முதல் வழக்கு இது.

அது போல, இந்தக் கோரத் தாக்குதல் உள்ளூர் மக்களின் உதவியில்லாமல் நடந்திருக்க முடியாது என்று “மோடி”கள் இட்ட கூக்குரல் காரணமாக அவசர அவசரமாக வழக்கில் சேர்க்கப் பட்ட பஹீம் அன்சாரி சபீய்யுத்தின் அஹ்மது ஆகியோர் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்ட்தும் இந்திய குற்ற வழக்குச் சரித்திரத்தில் ஒரு அதிசயம் தான்.

என்றாலும் வழக்கு நடைபெற்ற விதமும்- வழக்கின் போது விவாதிக்கப் பட்ட விசயங்களும் இந்தியா என்கிற மாபெரிய தேசத்தின் புலானய்வுத்திரன், விசாரனைத்தரம் குறித்த பலத்தை சந்தேகத்தையும் கேள்விகளையும் விட்டுச் சென்றுள்ளதை மறுக்க முடியாது.

கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட்தை கொண்டாடிய மீடியாக்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களது மனது இப்போதுதான் ஓரளவு சாந்தமடைந்துள்ளதாகவும் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டால் மாத்திரமே அவர்கள் முழுமையாக நிம்மதியடைவார்கள் என்று காரம் க்க்கிக் க்க்கிப் பேசின. TIMES NOW தொலைக்காட்சியின் மூத்த செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி Arnab Goswami அநியாயத்திற்கு மூல வியாதிக்கார்ரைப் போல நாற்காலி நுனியில் உட்கார்ந்து கொண்டு உடனிருந்த நிபுணர்களையும் பார்வையாளர்களையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார். பாதிக்கப் பட்ட சிலர் குற்றவாளியை மன்னித்து விட்ட்தாக சொன்னது ஆண்டி கிளைமாக்ஸாக அமைந்த்து.

கசாப் தண்டிக்கப் பட வேண்டியவனே! தண்டனை பெற்ற கசாப் சிறையில் ஐவேளை தொழுவதாகவும் திருக்குர் ஆன் ஒதுவதாகவும் செய்திகள் வருகின்றன. அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்பவர்கள் அல்லாவின் பக்தர்களாக காட்டிக் கொள்வது அசமஞ்சித்தனமே தவிர வேறில்லை. “அப்பாவி ஒருவனைக் கொல்பவன் மனித சமூகத்தையே கொலை செய்தவனைப் போன்றவன். ஒரு உயிரைக் காத்தவன் மனித சமூகத்தையே காப்பாற்றியவனவான் என்று பேசுகிற திருக்குரானுக்கு செந்தம் கொண்டாட அவர்கள் ஒரு போதும் அருகதை அற்றவர்களே.

இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளும் வழிகாட்டுதல்களும் தெளிவானாவை. முல்லாக்களும் மதரஸாப் பீடங்களும்தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற தேவைகளற்றவை. என்வே இந்த தீவிரவாத்தை தாக்குதலுக்கு இஸ்லாமோடு தொடர்பு படுத்தி நியாயம் கற்பிக்க எந்த வழிவகையுமில்லை.

பாகிஸ்தானிலிருக்கிற சைத்தான் பிடித்த சில இந்திய எதிரிகள் இந்த்த் தாக்குதலுக்கு காரணமாக இருக்க கூடும். அதில் மதச் சாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அஜ்மல் கசாபை நினைவோடும் நினைவிழக்கச் செய்த நிலையிலும் விசாரித்த அதிகாரிகள் அவனிடம் அதிகமாக கேட்ட கேள்விகள் “ஜிஹாதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜிஹாதைப் பற்றி திருக்குர் ஆன் என்ன சொல்கிறது.” என்பவையாகும். இது பற்றி கசாபுக்கு எதுவும் தெரிந்திருக்க வில்லை. அவனால் எந்த் திருக்குர் ஆன் வசனத்தையும் கூறமுடியவில்லைஎன்று அதிகாரிகளின் அறிக்கை தெளிவு படுத்துகிறது,

"When we asked whether he knew any verses from the Quran that described jihad, Ajmal Amir said he did not," police said. "In fact he did not know much about Islam or its tenets," according to a police source. (ABC News, 03-Dec-2008)

கசாபுக்கு வழங்கப் பட்ட தண்டனையை இந்திய முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்கிற அமைப்புக்கள் பலவும் வரவேற்றன. அகில இந்திய முஸ்லிம் 'தனியார் சட்ட வாரியத்தின் துணை தலைவர் சாதிக் கூறுகையில், 'ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்த கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான். அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களை, பல முறை தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கருணை காட்ட முடியாது என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது' என்றார்.

முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் காலித் ரசீத் கூறுகையில், 'இந்திய நலனுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு, இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நபர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

முஸ்லிம் அமைப்புக்களின் இத்தகைய வெளிப்படையான எதிர்ப்புச் சூழ்நிலையிலும் கூட மும்மபை தீவிரவாத்த் தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மீடியாக்கள் அடையாளம் படுத்த்தின., இந்திய உள்துறை அமைச்சர் அதிகம் படித்த சிதம்பரம் உட்பட பலரும் இதை இஸ்லாமிய அடிப்படை வாத்த்தோடு இணைத்துப் பேசினர். இத்தப் போக்கு பிரச்சினையின் உண்மையான கண பரிமாணத்தை திசை திருப்பவே செய்யும்.

மும்பை விசேஷ நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரும் மும்பைத் தாக்குதல் வழக்கும் விசாரணையும் முழுமையடையாத்தாகவே இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரனை வெளிப்படுத்த்த் தவறிய மிக முக்கியமான அம்சம் – இச சதித்திட்ட்த்திற்கான நோக்கம் – என்ன என்பதே!

கசாபின் மீதான குற்றச் சாட்டுகள் நீரூபிக்கப் பட்டிருப்பதாக கூறிய நிதிமன்றத்தில் அவனுக்கு வழங்கப் பட வேண்டிய தண்டனைப் பற்றி வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் சுமார் 2 மணிநேரம் வாதிடினார்.

மும்பையின் ஆர்தர் சாலைச் சிறைச் சாலையில் அமைக்கப் பட்டிருந்த விசேஷ நிதிமன்றத்தில் நிரம்பி வழிந்த கூட்ட்த்திற்கிடையே நிதிபதி தகில்யானியின் முன்னால் அவர் எடுத்துவைத்த வாதங்கள் கசாபின் குற்றச் செயலின் கனபரிமாணத்தை படம்பிடித்துக் காட்டின.

கசாப் திட்டமிட்டே இத்தாக்குதலுக்கு தயார்படுத்தப் பட்டவன். லஷ்கர் தைய்யிபா அமைப்பின் பிதாயீன் பிரிவைச் சேர்ந்தவன் மிகவும் முன்கூட்டியே திட்டமிட்ட இந்த சதிச் செயலை நிதானமாக, எவ்வித சலனமுமின்றி சிரித்தபடியே நிறைவேற்றியுள்ளான். மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த நேரத்தில் தான் வந்துவிட்டதாக கசாப் வருத்தப்பட்டுப் பேசியதே அவனது கொலை வெறியின் தீவிரத்தைப் காட்டு வதாகவும், சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தனது கூட்டாளி அபு இஸ்மாயிலுடன் சேர்ந்து 60 பேரை கசாப் கொன்றுள்ளதாகவும், கசாப் சிரித்தபடியே அப்பாவி மக்கள் மீது துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளதாகவும் இது முழுக்க முழுக்க ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் என்று கூறிய உஜ்வால் நிகாம். இந்தக் கொடூரச் செயலுக்கான நோக்கம் – அல்லது காரணம் என்ன என்பதை உண்மையாகவும் முழுமையாகவும் கடைசி வரை விளக்கவே இல்லை.

பத்ரிகைகளும் இணையதள செய்தி ஊடகங்களும் பணத்திற்காகவே இத்தாக்குதலில் கசாப் ஈட்பட்ட்த்தாக் கூறின. இத்தாக்குதலில் வெற்றிகரமாக முடித்துவிட்டல் தனக்கு 1.50.000 ரூபாய் வழங்கப் படும் என்று வாக்க்களிப்பட்ட்தாகவும் தனது தந்தையின் பேல்பூரி வியாபாரத்தால் வசதி பெறமுடியத தன்னுடைய குடும்பம் இந்த பணத்தால் வசதி பெறக்கூடும் என்று கசாப் கூறியதாக ஏபிசி செய்தி கூறியது.
I was promised that once they knew that I was successful in my operation, they would give Rs 150,000, to my family," said Qasab.
ஏ பி சி இதற்கு அடுத்த்தாகச் சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானது. கசாப் சொன்னான் “எனக்கு நல்ல உணவும் பணமு கொடுத்தீர்கள் என்றால் அவர்களுக்காக நான் செய்த காரியத்தை உங்களுக்காகவும் செய்வேன்” "If you give me regular meals and money I will do the same for you that I did for them," he said

பதிரிகைகளிலும் இணைய தளங்களிலும் உலாவருகிற இது போன்ற செய்திகளில் எவ்வளவு நிஜம் எவ்வளவு கற்பனை என்பதை சாமாணிய மக்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால வலிமையான ஒரு தேசத்தின் புலன் விசாரணை அமைப்பாலும் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ற கேள்விக்கு விடையேதும் கிடைக்க வில்லை என்பதே இந்த வழக்கு விசாரனையின் மாபெரிய சருகுதலாகும்.

நிதிபதிகள் தங்களது தீர்ப்ப்புகளில் குற்றம் இன்ன நோக்கத்திற்காக செய்யப் பட்டது என்பதை தெளிவுபடுத்துவார்கள். கடுமையான தண்டனைகளின் போது இது இன்னும் விரிவாக சொல்லப்ப்டும். ஆனால் இந்த வழக்கிலோ நீதிபதி தகில்யானி “ இந்த மனிதன் (கசாப்) எந்த மனிதாபிமான உதவியையும் கோருவதற்கு தகுதிதியை இழந்துவிட்டான். ( "This man has lost the right to get any humanitarian relief," Tahaliyani observed. ) என்று கூறினாரே தவிர இவனை குற்றம் செய்யத் தூண்டிய காரணம் இது என்று எதையும் கூற வில்லை.

ஒரு கொடூரத் தாக்குதல் ஏன் நடத்த்ப் பட்டது? அதன் பின்னணி என்ன என்பது தீர்மாணமாகவும் தெளிவாகவும் அடையாளம் காணப்படாமல், தீவிரவாதம் அல்லது இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது பாகிஸ்தானிய தீவிரவாதம் என்ற ஒரு சொற்றடரை மட்டுமே கீறல் விழுந்த இசைத்தட்டாக சுழல விடுவது பிரச்சினைக்கு தீர்வாகிவிடுமா என்ற கேள்விக்கு விடை எதுவும் இதுவரை காணப்படவில்லை.

எந்த ஒரு பெரிய விபத்தின் போதும் முழுமையற்ற தற்காலிக கண்டுபிடுப்புக்களை பெரிய சாதனையாக முழக்கி நீட்டுகிற இந்திய புலனாய்வு மற்றும் நீதி அமைப்புக்கள் தேசத்தின் கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றன என்றே சொல்ல வேண்டும்.

ஹைதரா பாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்களின் போது இந்திய புலனாய்வு அமைப்புக்கள் நடத்திய அலம்பல்களை என்ன வென்று வர்ணிப்பது? பங்களா தேஷிலிருந்து ஹுஜி அமைப்பின் கமாண்டோ ஒருவன் மொபைல் போன் மூலம் குண்டு களை வெடிக்கச் செய்துள்ளான் என்று எவ்வளவு அழுத்தமாக ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அடித்துச் சொன்னார்கள்? இப்போது அது உள்ளூர் இந்துத்துவ அமைப்பின் வேலை என்று தெரியவருகிற போது புலனாய்வு அமைப்புக்கள் கேலிப்பார்வைக்கு ஆளாகின்றன என்றாலும் அவற்றுக்கு ஏற்படுகிற அவமானத்தை விட இந்தியப் பொதுஜனத்தின் பாதுகாப்பு எவ்வளவு தூரம் கேள்விக்குரியதாகிறது என்பதல்லவா முக்கியம்?

மும்பை தீவிரவாத்த் தாக்குதல் வழக்கியில் கையில் சிக்கிய ஒருவனை கழுவிலேற்றியாச்சு என்பது மட்டுமே இந்த தீர்ப்பின் ஒற்றைச் சாதனை என்று சொன்னால கண்டிப்பாக நமது நாட்டின் புலனாய்வு மற்றும் நீதி அமைப்பின் ஆளுமை சந்தேகத்திற்குரியதாகிவிட வாய்ப்பிருக்கிறது,

அதிர்ஷ்ட வசமாக இந்த வழக்கில் இரண்டு இந்திய முஸ்லிம்கள் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பஹீம் அன்சாரி சபிய்யுத்தீன் அஹ்மது ஆகிய அந்த இருவரும் தான் கசாபுக்கு மும்பை நகரத்தின் வரை பட்த்தை கொடுத்தார்கள் என்பதே குற்றச்சாட்டு. அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்த வரைப்படம் கசங்கவோ இரத்தக் கறை படிந்த்தாதக்வோ இருக்கவில்லை என்று கூறி நீதிமன்றம் அவ்விருவரையும் விடுதலை செய்துவிட்டது.

புலனாய்வு அமைப்புக்களின் முதுகில் விழுந்த கசையடி அது. இனி இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்கள் தேசியை மாநில நகர வரை படங்களை கையில் வைத்துக் கொள்வது ஆபத்தானது என்று அச்சப்படுகிற ஒரு சூழ்நிலையை நாட்டின் பல பகுதிகளிலிம் புலனாய்வு அமைப்புக்கள் ஏற்படுத்தியிருந்தன.

சுற்றுலா செல்வதற்கு வசதியாக நம்வீட்டில் ஒரு பெரிய மேப் வாங்கி வைக்க வேண்டும் என்று என் மனைவி சொன்னார். சத்தம் போடாதே! யாராவது போலீஸ்காரன் காதில் விழுந்து தொலைக்கப் போகிறது. முஸ்லிம் வீட்டில் மேப் வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணைக்கு வந்து விடப் போக்றார்கள் என்று சில மாதங்களுக்கு முன் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

கோவையின் புற நகர்ப் பகுதியில் குடியிருந்த இரண்டு இளைஞர்களை அவர்கள் கோவை நக்ரத்தின் மேப் வைத்திருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்த்து கோவை மாநகர காவல் துறை. கோவை நகரை தகர்க்க பயங்கர சதி என்று மூன்று நாட்கள் மீடியாக்கள் அலறின. பின்னர் அந்த இளைஞர்கள் விடுதலை செய்யப் பட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் மும்பை நீதிமன்றத்தின் இந்த்த் தீர்ப்பு புலனாய்வு அமைப்புக்களின் சாரமற்ற குற்றச்சாட்டுகளின் வேஷத்தை கலைத்து விட்ட்து.

இந்தியப் புலனாய்வு அமைப்பின் இந்த ஆளுமைக் குறைவினாலேயே இரு இந்தியர்கள் விடுதலை செய்யப் பட்ட்தை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த்திக் கொள்ள முயன்றது. இந்திய நீதிம்னறத்தின் தீர்ப்பு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்திருக்கிறது என அது நல்ல பிள்ளை போல பேசியது.

அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் போக்கினால் தனது மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை இழந்து விட்ட பாகிஸ்தானிய அரசுகளை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கென்னவோ செத்த பாம்பை அடிக்கிற கதையாகத்தான் தோன்றுகிறது. இது விசத்தில் கெட்டிக் கார்ர்களான நம்மூர் அரசியல் வாதிகள் அதையே ரொம்ப சாதுர்யமாக செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று அரற்றிக் கொண்டிருப்பது நம்முடை அரசியல் வாதிகளும் புலனாய்வு அமைப்புக்களுக்கும் சொளகரியமான ஒரு காரணமாகப் அமைது விட்ட்து. இந்த வார்த்தையை சொல்லி விட்டால் இந்தியப் பொதுஜன்ங்கள் அமைதியடைந்து விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையே அதற்கு காரணம்.

நம்முடைய நாட்டின் பொருளாதார தலைநகரான ஒரு நகரத்திற்குள் பக்கத்து நாட்டிலிருந்து பத்து பேர் சர்வ சாதாரணமாக பய்ங்கர ஆயுதங்களுடன் வந்து ஒரு 64 மணிநேரத்திற்கு நாட்டைபை கதி கலங்க வைத்து விட்டார்கள் எனில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களிடம் எத்தகைகைய விசாரணை நடைபெற்றது என்ற தகவல் எதுவும் இது வரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப் படவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிம்னறமும் இது குறித்த எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.

இத்தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெற்றதாக மட்டுமே குறிப்பிட்ட அரசு வழக்கறிஞரும் அதை ஆமோதித்த நீதிமன்றமும் இந்த் தாக்குதலுக்காக இந்திய மண்ணில் மேற்கொள்ளப் பட்ட முன்னேற்பாடுகள் பற்றி எதையும் குறிப்பிட வில்லை.

இந்த வழக்கில் திடீர்ன்று முளைத்த அமெரிக்கத் தயாரிப்பான ஹெட்லீக்கு என்ன தண்டனை என்று கூறப்படவில்லை. அவர் தன் மும்பைத் தாக்குதலுக்கு வடிவம் கொடுத்தவர் என்று அமெரிக்கா கூறுயது. அந்த வேதவாக்கை இந்திய அரசு அப்படியே எதிரொலித்த்து. தன்னுடையை மண்ணில் மிகப் பெரிய இரத்தக் களறியை ஏற்படுத்திய ஒருவனைப் பற்றிய உண்மையை அமெரிக்காவே கண்டறிந்து அவனை கைது செய்த பிறகு அந்தச் சதிகாரனை எங்களிடம் கொடு என்று கூட கேட்காமல் அவனை விசாரிக்கவாவது அனுமதி வேண்டும் என்று இந்தியா மன்றாடியது. உலகில் இதைவிட நீதமான ஒரு கோரிக்கை இருக்க முடியாது. அமெரிக்கா மறுத்துவிட்ட்து.

உலகில் யாரிடமிருந்தும் தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் உரிமையும், மற்ற யாருக்கும் தேவையானதை தர மறுக்கும் உரிமையும் அமாரிக்க மக்களுக்கு உண்டு. அது அந்த நாட்டின் சுதந்திர தேவி அவர்களுக்கு பாலூட்டிய பண்பாடு. அதனால் அமெரிக்க இந்தியாவின் நீதமான கோரிக்கையை ஏற்கமறுத்த்து. அமெரிக்காவின் இந்த நீதியுணர்வு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் மும்பைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக ஹெட்லியின் பெய்ரும் அவருக்கு இடமளித்த ராணாவின் பெய்ரும் முக்கியமாக அடிபடத் தொடங்கிய பிறகு, அமெரிக்காவின் கூற்றை இந்தியாவும் எதிரொலித்து விட்ட பிறகு, இந்த வழக்கின் குற்றவாளிகளின் பட்டியலில் ஹெட்லியின் பெயர் ஏன் சேர்க்கப் படவில்லை. அவர் மீதான குற்றத்திற்கு தண்டைனை ஏன் விதிக்கப் படவில்லை? என்ற கேள்விகள் இன்று வரை ஒரு புதிராக நிற்கின்றன. மும்பை விசேஷ நீதிமன்றமோ இது குறித்து மூச்சு விடவில்லை.

ஒரு அரசு வக்கீலாக மாத்திரம் நிற்காமல் ஏதோ வெளியுறவுத்துறை செயலாளர் போல வெளியரங்கில் சரமாரியாக பாகிஸ்தானை குற்ற்ம் சாட்டிப் பேசிய திருவாளர் உஜ்வல் நிகமின் வாயிலிருந்து ஒரு தடவை கூட ஹெட்லி என்ற பெயர் வரவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வரிவிடாமல் அலசிய மீடியாக்களிலும் இது பற்றி ஒரு விவாதமும் சர்ச்சையும் எழவில்லை.

மிக அத்தியாவசியமான இந்தக் கேள்வியை கண்டு கொள்ளாத மீடியாக்களும் இந்துத்துவ அரசியல் வாதிகளும் சதடி சாக்கில் கசாபுக்கு தூக்கு என்ற விசயத்தோடு அப்ஸல் குருவின் தூக்கு சமாச்சாரத்தையும் சந்திக்கு இழுத்த்தார்கள்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்டி அநியாயத்திற்கு இதில் அக்க்றை காட்டியது. அதன் வெத்து வேட்டுச் செய்தியாளர் பொய்யான கோபத்தோடு இந்த விசயத்தில் காட்டிய ஆக்ரோஷத்தை கண்டிருந்தால் நீங்கள் ஆடித்தான் போயிருப்பீர்கள். அவ்வளவு கோபம் அவருக்கு. என்ன முட்டாள் செய்தியாளர்கள் இவர்கள் என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு இந்த விசயத்தை இழு இழி என்று அந்த தொலைக்காட்சி இழுத்த்து. அதன் பிறகு இந்த ஜுரம் மற்ற சானல்களையும் தொற்றிக் கொண்ட்து.

மும்பை தாக்குதல் வழக்கில் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்த வழக்கின் முதல் கட்ட நடவடிக்கையே. இந்த தண்டனைக்கு, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பிரிவு 366ன் கீழ், மும்பை ஐகோர்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கசாப் தரப்பிலும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படலாம். அப்படி அப்பீல் செய்யப்பட்டால், வழக்கின் அனைத்து சாட்சிகளும் மீண்டும் விசாரிக்கப்படுவர். பின்னர் தான் தண்டனையை அப்படியே உறுதி செய்யலாமா அல்லது குறைக்கலாமா என்பதை மும்பை ஐகோர்ட் முடிவு செய்யும். கசாப்பிற்கான மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தாலும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உண்டு. அப்படி அப்பீல் செய்யப்பட்டால், முந்தைய தீர்ப்புகள் உட்பட அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் தீவிரமாக பரிசீலித்து தீர்ப்பு வழங்கும். சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தால், அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், ஜனாதிபதியிடம், கசாப் கருணை மனு அளிக்கலாம்

உச்ச நீதிமன்றத்தால் தூக்கு உறுதி செய்யப் பட்ட 29 பேர் இன்னும் ஜனாதிபதியிடம் மனுக் கொடுத்து வரிசையில் நிற்கிறார்கள். கசாப் அந்த வரிசையில் நிற்கப் போகிறானா என்பதே இன்னும் தெளிவாகவில்லை.


இது ஓரளவு படிப்பறிவுள்ள அனைவருக்கும் தெரியும் என்கிற போது கேமராவுக்கு முன்னாள் கிழவி நியாயம் பேசிக் கொண்டிருக்கிற வம்பர்களுக்குத் தெரியாமல் போவது ஆச்சரியமே.

நீதிமன்ற அமைப்பை பராமரிக்க் வேண்டியதில்லை என்றால் எப்போதோ கசாபை எண்கவுண்டரில் சுட்டுத் தள்ளியிருக்கலாமே! கசாபும் அதற்கு கவலைப் பட்டவன் அல்லவே! அவனுக்காக கவலைப் படுவதற்கும் யாரும் இல்லையே! என்பதல்லாம் அவர்களுக்குத் தெரியாதா? தொரியும். ஆனாலும்
மீடியாக்கள் வேணுமென்றே மக்கள் மத்தியில் பொறுப்பின்றி ஆத்திரத்தை கிளப்புகின்றன.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் துக்கு தண்டனை விதிக்கப் பட்ட்வர்கள்தான் தூக்கு தண்டனைய எதிர்பார்த்திருக்கும் கைதிகளில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசாமல் அப்ஸல் குருவைப் பற்றி அவர்கள் பேசுவது இதில் தேவையற்ற மதச் சாயத்தை பூசும் உத்தியாகும்.

அஜ்மல் கசாபை தூக்கிலிட்டால் அதனால் இந்தியாவில் எந்த் விளைவும் வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை தூக்கி லிட்டாலும் பெரிதாக எந்த விபரீதமும் ஏற்பட வாய்ப்பில்லை.

அப்ஸல் குரு விசய்ம அப்படி அல்ல. அதில் காஷ்மீர் மாநிலமே கொந்தளித்துப் போகும் அபாயம் இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த காங்கிரஸ் காரரான குலாம் நபி ஆஸாத் அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசு. இப்போது திடீரென பேருந்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவன் பின் சீட்டில் உட்காந்திருப்பவனின் நீ எங்கடா போற என்று செல்போனில் கேட்பது போல அப்ஸல் குரு விசய்த்தில் விரைவாக ஒரு முடிவுக்கு வருமாறு தில்லி மாநில அரசிடம் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறது.

'முன்னர் ஒரு சம்யம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது “ ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தவர்களின் பட்டியலில் அப்சல் குருவுக்கு முன்பாக 21 பேர் உள்ளனர். இவர்கள் விஷயத்தில் முடிவு எடுத்த பின்னரே, அப்சல் குரு விஷயத்தில் முடிவு எடுக்க முடியும். இது சட்ட நடைமுறை' என்றார். இத்தனை நாட்கள் வாளாவிருந்த அவரது துறையே இப்போது தில்லி அரசுக்கு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறது.

இது என்னடா வம்பாப் போச்சு என்று பய்ந்த தில்லி முதல் ஷீலா தீட்சித் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் உடனே அந்தக் கடித்த்தை ஆளுநருக்கு அனுப்பி “நீங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள் என்று கேட்டார். தில்லி மாநில ஆளுநரோ அப்ஸல் குவிற்கு தூக்கு தண்டனை வழங்கினால் ஏற்படக் கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் அதில் இல்லை என்று அதை திருப்பி அனுப்பி யிருக்கிறார். இதற்கிடையே தற்போதைய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வும் அப்ஸல் குருவிற்கு தண்டனை நிறைவேற்றுவது காஷ்மீரில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணும் என்று எச்சரித்திருக்கிறார்.

உங்களுக்கு தலை சுற்றுகிறதா?

நம் நாட்டின் தீவிரவாத்த்தாக்குதல்களின் உண்மைப் பின்னணியை தேடும் படலம் இப்படித்தான் மிகச் சுலபமாக மத மாச்சரியத்திற்குள் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது.


கசாபுக்கு மரண தண்டனையை தீர்ப்பளித்த நிதிபதி தகில்யானி கசாபை பார்த்து – நீ இறக்கும் வரை உனது கழுத்தில் கயிறுமாற்றப் பட்டு அதில் தொங்க விடப்படுவாய் என்று சொல்லி விட்டி “ யே ஹமாரா தரீக்கா ஹே” இது தான் எங்களூர்ப் பழக்கம் என்று சொன்னார்.

தீவிரவாத்த்தின் ஆணிவேரை கண்டறியாமல், புலனாய்பு அமைப்புக்களின் புனைவுகளில் நீதிமன்றங்களும் அரசுகளும் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் இந்த அக்கப்போ தொடந்து நடந்து கொண்டிருக்கும் வரை இப்படித்தான் சாத்தான் அனுப்புகிற அரக்கர்கள் சத்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். உஜ்வால் நிகம்கள் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஏ பீ ஹமாரா த்ரீக்கா ஹே!

1 comment:

Anonymous said...

கடல் வழியாக ஒருவன் இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டான் என்பதை கடற்படை முதலில் ஒத்துக் கொள்கிறதா?
இந்திய கடற்படைக்கு இது அவமானாக தெரியவில்லையா? இந்தியாவிற்குள் கடவழியாக எவன் வேண்டுமானாலும் உள்ளே வர முடியுமா? அடுத்த தெருவில் இருக்க கூடிய இலங்கைக்கு மீனவர்கள் படகு சென்றாலே பிடித்து உள்ளே போட்டுவிடுகிறார்கள். அப்படி இருக்கையில் கசாப் கடல் வழியாக இந்தியாவிற்குள் வந்தது எப்படி "உஜ்வால் நிகாம்" இந்தியாவில் கடற்படை இல்லை என்று நம்புகிறாரா?