Friday, January 16, 2015

ஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள்



தி ஹிந்துவில் கடந்த மாதத்தில் இரு கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லி அமைந்திருந்தது. அதற்கு எழுதிய கடிதம்.


தொடர்ந்து முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கும்அல்லது அவர்களை செதுக்க முயற்சிக்கும் கட்டுரைகளை இந்து வெளியிடுகிறது. ஒரு வகையில் மகிழ்ச்சியே!
அதே நேரத்தில், இந்த முட்டாள்கள் ஏன் இப்படி மற்றவர்களை அழித்து தாமும் அழிந்துபடுகிறார்கள் என்கிற கேள்வியை எத்தனை நாட்களுக்கு நாம் புறக்கணிக்க முடியும் என்பதையும் நாம் விவாதிக்க வேண்டும்!
நான் முஸ்லிமாக இருந்து கொண்டு இதை சொல்வதால் இது தீவிரவாதிகளுக்கு ஆதரவானது என அர்த்தப்படுத்தி விட வேண்டாம்.
சத்தியமாக இத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு ஆதாரவாக அல்ல, மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அக்கறையில் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.
பாதிப்புக்களை கண்டு கலங்கி நிற்கும் போதும், ஆறுதல் தெரிவிக்கிறபோதும் கூட நாம் உணர்ச்சிவசப்படலாம். அதற்கடுத்த கட்டத்திலாவது எதனால் இது நடந்தது, இதை தடுப்பதற்கான அறிவார்த்தமான வழி எது என்று யோசிக்கலாமே!
நம்மை அதீத புத்திசாலிகளாக,  அல்லது நாகரீகம் -,சுதந்திரத்தின் தளகர்த்தர்களாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் உலகை தொடர்ந்து ஆபத்தின் பிடிக்குள்அச்சத்தின் குகைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேககம் ஒரு வாசகனாக என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது,
அமெரிக்கா இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நாட்டாமை கால் வைக்கிற இடத்திலெல்லாம் தலைமுறைகளை தாண்டி கலகம் தொடர்கிறது. 
பிரான்ஸ் பத்ரிகையின் மீதான தாக்குதல்களை உலகமே கண்டித்து விட்டது. பத்ரிகையின் சுதந்திரம் பற்றிய பேச்சு இப்போது வேண்டாம். தாக்குதலை ஏற்க முடியாது என்று கண்டித்து விட்டோம். நூற்றுக் நூறு சரியான வாதம். ஆனால் மீண்டும் முஹம்மது நபியின் கேலிச்சித்திரம் வரையும் அப்பத்ரிகையின் தீர்மாணம் மன உறுதியை காட்டுகிறதா ? வெறுப்புணர்வை காட்டுகிறதா?
இது என்ன நியாயமான யோசனை ? கேலிச்சித்திரம் தீவிரவாதிகளைப் பற்றியல்லவா இருக்க வேண்டும்? கையில் துப்பாக்கி வைத்து முகமூடி அணிந்திருக்கிறவனை முஸ்லிமாக அடையாளப்படுத்து வதை நியாயம் என்றே நினைத்துக் கொள்ளுங்கள்.  வரலாற்றின் புனித பிம்பத்தை தொடர்ந்து  அவமதிக்கும் செயலை எப்படி சுதந்திரமாக மட்டுமே பார்க்க முடியும்?
உன் மனைவிய நிர்வானமாக படம் பிடிப்பது அவனவன்  உரிமை அதை நீ மறுக்கலாம் ஆனால் பொருத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சட்டம் சொல்லும் என்றால் முட்டாள்களின் எண்ணிக்கை பெருகாமல் என்ன செய்யும்?
பாகிஸ்தானின் குழந்தை படுகொலை நாம் பார்த்த கடைசி கோரமாக இருக்கட்டும் என்றே மனம் பிரார்த்தனை செய்கிறது. அதே நேரத்தில் தீவிர்வாதிகள் என்று  அடையாளப்படுத்தி, விஞ்ஞானத்தின் துணையை பயன்படுத்திக் கொண்டு, தமக்கு பாதிப்பில்லாத வகையில்  ஆளில்லா விமானங்கள் மூலம் திடீர் திடீர் என குண்டு வீசும் நியாயவான்கள் இந்த பிரார்த்தனையை தடுத்து அழித்து விடுவார்களோ என அச்சத்தின் எதார்த்ததை அறிவு ஜீவிகளாக நாம் எத்தனை நாளைக்கு ஒதுக்கி வைக்க முடியும்.
எதனால் இது ? என்ற கேள்வியை நாம் தொடர்ந்து புறக்கணிக்கிறோம் . அதனால் உலகம் மிக குரூரமாகி வருகிறது.
பெரும்பாலும் நமது விரல் ஒரு தரப்பை மட்டுமே சுட்டி நிற்கிறது. அதுவும் ஊமையாக்கப்பட்ட தரப்பை.
கொஞ்சம் சூழ்நிலை தணிந்ததும் எதனால் இது என்று கேள்விகளுக்குள் நாம் பயணிக்கவேண்டும். சரியான தீர்வுகளுக்காக மட்டுமல்ல உலகின் அமைதிக்கும் நாம் உண்மையாக யோசிக்க வேண்டும். 
கோவை அப்துல் அஜீஸ் பாகவி