Wednesday, September 21, 2016

ஹஜ்ஜின் நினைவுகள்

அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன.
ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனினும் ஹஜ்ஜின் நினைவுகளிலிருந்து மனம் இன்னும் மீளவில்லை
ஹஜ்ஜின் நிறைவான ஒரு நிகழ்ச்சியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஹாஜிகளிடம் கோரினோம்.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் நாட்டு ஹாஜி, டயர் வடிவமைப்பில் விற்பன்னர். ரேடியல் டயர் தொழில் நுட்பத்தை முதன் முதலாக உருவாக்கியவர், தனது அனுபவங்களை பேசினார்.
ஐந்து வருடமாக நான் ஹஜ்ஜுக்கு வருவதற்கு முயற்சி செய்கிறோன். கம்பெனியின் பணிச் சுமை காரணமாக ஏதோ ஒரு காரணத்தால் பயணம் தடை பட்டுக் கொண்டே வந்தது. இந்த ஆண்டு இராஜினாமா செய்து விட்டு நாங்கள் ஹஜ்ஜுக்கு வந்தோம். மெக்ஸிகோ பாரிஸ் என உலகின் பல நாடுகளில் நான் வசித்திருக்கிறேன். அங்கு செல்லும் போது என் மனைவியை வீல் சேரில் வைத்துத் தான் அழைத்துச் செல்வேன். அவரால் அதிக தூரம் நடக்க முடியாது. ஆனால் இந்த ஹஜ்ஜுப் பயணத்தில் நாங்கள் ஒரு முறைகூட வீல் சேர் பயன்படுத்த வில்லை. அல்ஹம்து லில்லாஹ், ஹஜ் முடிந்து விட்டது என்றார். கூட்டம் மாஷா அல்லாஹ் என ஆர்ப்பரித்தது.
அந்த அம்மையார் பல இடத்திலும் கண்ணில் கண்ணீர் மல்க நின்றிருந்த இடங்களில் என்ன வேண்டும் என்று அருகே சென்று விசாரித்திருக்கிறேன். ஒன்று மில்லை ஹஜ்ரத் கால் வலி என்று சொல்வார். கால் வலி இல்லாமல் ஹஜ் இல்லை என்று சமாதானம் சொல்லி விட்டு நகர்ந்திருக்கிறேன். இந்த செய்தியை கேட்டு கண்கள் கொப்பளிக்க நான் சொன்ன மாஷா அல்லாஹ்வில் ஈரம் அதிகம்
ஹஜ் பயணத்தில் பல் வேறு வசதிகள் வந்து விட்ட போதும் அல்லாஹ் ஹஜ்ஜின் சிரமத்தை உணர்வதற்காக இன்னும் மிச்சம் வைத்திருக்கிற ஒரு வழியாக நடையும் கால் வலியும் இருக்கின்றன. அதிலும் பல சவுகரியங்கள் எஸ்க்லேட்டர் நிழல் தரும் மரங்கள் என இருந்தாலும் அதிக நடையின் காரணமாக கால வலி என்பது ஹஜ்ஜின் பரிசாகவே இன்றும் இருக்கிறது. அது இரசிக்கும் பரிசாக மாறிவிடுகிறது என்பது தான் ஹஜ்ஜின் மகத்துவம் . ஒரு ஹாஜி ஆரம்பத்தில் ஹஜ்ரத் நான் வீல் சேர் வாங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்டார். வேண்டாம்! இலேசாகி விடும். தேவை எனில் எந்த இடத்திலும் வாங்கிக் கொள்ளலாம் என்றேன். காலில் பேண்டேஜ் அணிந்து கொண்டே ஹஜ்ஜின் அனைத்து கடமைகளையும் நடந்தே நிறைவேற்றினார் அந்த மேட்டுப் பாளையத்து ஹாஜி.
ஏ.டி.எஸ்.பியாக இருக்கும் ஹாஜி இபுறாகீம் பேசினார்: இரத்தினச் சுருக்கமான வார்த்தையில்
ஹில்டன் சூட்டில் தங்கியிருந்ததை விட மினாவில் தங்கியிருந்தது மிகவும் பிடித்திருந்தது என்றார்.
ஹரமுக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஹில்டன் சூட்டின் வனப்பும் வசீகரமும் விசாலமும் ஒரு உல்லாசமான தங்குதலுக்கும் ஓய்வுக்கும் தூண்டுபவை. வெளியே சந்தித்த ஒரு வர் ஹில்டனில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜா என்று கேட்டாராம். ஆனால் ஹாஜிகள் ஹில்டனிலிருந்து ஹரமிற்கு செல்லும் வசதியை அனுபவிக்கிறார்கள். அதன் உல்லாசதை அல்ல.
மினாவிலிருந்து திரும்பிய ஏடிஎஸ்பியின் பேச்சு ஒன்றை அழுத்தமாக புரிய வைத்தது.
ஹஜ் தனது தத்துவங்களை மக்களுக்குள் ஏற்படுத்த தவறுவதில்லை.
அல்லாஹ் ரப்பு, மக்கள் தனி அடையாளம் ஏதுமற்ற அவனது அடிமைகள் என்பது மினாவின் கூடார வாழ்வு பயிற்றுவிக்கும் பாடம்.
இதை சரியாக உணர்வது ஹில்டனில் தங்குவதை விட சுகமானது.
வருகிற நாட்கள் இந்த டிராக்கில் செல்லும் எனில் ஹஜ்ஜிலிருந்து புறப்பட்ட பயணம் மப்ரூர் ஆகிவிட்டது என்று அர்த்தம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!

Saturday, April 25, 2015

இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார்.இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார்.
ஒரு ஷார்ட் விசிட்டாக தில்லி சென்ற சந்தர்ப்பத்தில் காலையிலிருந்து மதியம் வரை ஓய்வு கிடைத்தது. அப்போது தில்லியில் நான் சுற்றி பார்க்க நினைத்திருந்த பட்டியலில் குதுப்மினார் இருக்கவில்லை. ஒரு வரலாற்று மாணவனாக குதுப் மினாரைப் பற்றி படித்த தகவல்களோ இந்தியாவின் தொல்பொருள் சின்னங்களில் முக்கியமானது என்ற குறிப்போ என்னை ஈர்த்திருக்கவில்லை.  மன்னர்கள் தமது பெறுமைக்காக கட்டத் தொடங்கி முடிக்காமல் விட்ட ஒரு கோபுரம் என்ற அளவில் அது என்னிடம் ஈர்ப்பற்றிருந்தது.
அன்று அதிகாலையில் என் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போது குர் காவ்னிலிருந்து நான் செல்லும் வழியில் குதுப்மினார் இருந்தது. “குலா ரஹேதோ தேக்கேங்கே!” இந்த நேரத்தில் திறந்திருந்தால் பார்ப்போம் என டிரைவர் சொன்னார்.
திறந்திருந்தது.  
அதிக சிரத்தையில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொண்டு பெரிய அந்த பசுமையான வளாகத்திற்கு கிட்டத்தட்ட தனியாளாக உள்ளே நுழைந்த போது அந்த கம்பீரமும் ரம்மியமும் எனது அசிரத்தையை பறக்கடித்து விட்டது.  அது ஒரு பிரம்மாணடமான பள்ளிவாசல். அதன் ஒரு முனையில் செங்கள் கட்டிடமாக மிக கவுரமாக உயர்ந்து நின்றது குதுப்மினார். பக்கத்திலே பாதி சிதைந்த நிலையிலிருந்த வளைவுகள். தொன்மையின் ஆகர்ஷணம் என்பதை அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த கணம் அது. இனி இதற்குப் பின்னால் தில்லியில் எதையும் பார்க்கத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.
தற்போதுதான் அந்த உண்மையை படித்தேன் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தளம் தாஜ்மஹால் அல்ல; குதுப்மினார் தான்.
Qutab Minar is the favourite destination of tourists. It is India's most visited monument
2006 ம் ஆண்டு தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்தவர்களின் எண்ணிக்கை 25 இலட்சம். அதே வருடம் குதுப்மினாருக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 39 இலட்சம் என விக்கீபீடியா தெரிவிக்கிறது.
இனம் புரியாத பரவசத்தோடு சுற்றி வருகையில் அங்கிருந்த சிதிலமடைந்த நிலையிலும் கம்பீரமாக இருந்த ஒரு மஜார் (அடக்கஸ்தலத்திற்குள்) நுழைந்தேன்  பெரும்பாலும் ஓரிடத்திற்கு செல்வதற்கு முன் அதைப்பற்றி படித்து விட்டு செல்கிற நான் குதுப்மினார் வளாகத்தததைப் பற்றி படிக்காமல் சென்றதால் அங்கு மேலும் ஒரு அனுபவம் காத்திருந்தது, உள்ளே இருந்த அடக்கஸ்தலங்களில் ஒன்று இல்துமிஷினுடையது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னாள் தில்லியை மையமாக கொண்டு ஸ்திரமான மகிமை மிக்க ஆட்சியை நடத்திய பெருந்தகை. வரலாற்றின் கம்பீரமான பக்கங்களுக்குள் புதைந்துகிடந்த அந்த மாமனிதனின் புதைகுழிக் கருகே நிற்கிறோம் என்பது ஒரு சிலிர்ப்பை தந்தத்து. வரலாறு என் கண் முன் விரிந்தது.  
சிந்துப் பகுதியில் இஸ்லாமிய ஆட்சிக்கு வித்திட்ட முஹம்மது பின் காஸீம் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்.
அடுத்ததாக இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய மஹ்மூது கஜ்னவி இங்கு ஒரு அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
அதற்கடுத்து இந்தியா மீது படை எடுத்து வந்த சகரவர்த்தி முஹம்மது அல்கோர் (கோரி முஹம்மது) இங்கு ஒரு அரசை அமைத்து அதை கவனிக்கும் பொறுப்பை தன்னுடைய அடிமையும் நம்பிக்கைகுரிய படைத்தளபதியுமாக இருந்த குத்புத்தீன் ஐபெக்கிடம் கொடுத்தார். குத்புத்தீன் ஐய்பக் தான் இந்தியாவில் இரண்டாம் கட்ட முஸ்லிம் ஆட்சியை லாகூரை தலைமையாக கொண்டு தொடங்கியவர் ஆவார்.  தில்லி அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. குதுப்மினார் வளாகத்தில் உள்ள குவ்வத்துல் இஸ்லாம் பள்ளிவாசலை கட்டியவர் இவர்தான். குதுப்மினாரின் ஆரம்ப இரண்டு அடுக்குகளை கட்டிவரும் இவர் தான். பள்ளிவாசலுக்கான பாங்கு மினாராவாகவும் அதே நேரம் இந்தியாவில் முஸ்லிம்களின் அரசின் தொடங்கியதற்கு அடையாளமாகவும் பிரம்மாண்டமாக சிவப்பு செங்கற்களால அந்த கோபுரத்தை கட்டினார். அதை கட்டி முடிப்பதற்கு இறந்து போனார்.
குத்புதீன் ஐபக் தனது அடிமையாக இருந்த ஷம்சுத்தீன் இல்துமிசை விடுதலை செய்து அவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். நான்கு வருட ஆட்சிக்குப் பிறகு குத்புத்தீன் ஐபெக் இறந்த போது  போது இல்துமிஷ் தில்லியை மையமாக கொண்ட உறுதியான மகோன்னதமான தனி அரசை நிறுவினார். தனது ஆட்சிப்பகுதிக்குள் எந்த ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதற்கென சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மக்கள் அரசரை சந்திக்க தாமதமாகக்கூடும் என்று கருதிய அவர் அநீதிக்குள்ளானவர்கள் முறையிட ஒரு புதுவகையான ஏற்பாட்டை செய்தார், அநீதிக்குள்ளானவர்கள் அந்த ஜாமியா பள்ளிவாசலுக்குமுன் தொழுகைக்குப் பின் தில்லிவாசிகள் வழக்கமாக ஆடைக்கு மாற்றமாக ஒரு ஆடை அணிந்து வந்தால் போதுமானது, அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தார். தனது வீட்டுக்கு வெளியே நீண்ட சங்கிலியில் மணியை கட்டிவைத்து அநீதியிழைக்கப்பட்டோர் மணியோசையை எழுப்பி தனது உறக்கத்தை கலைக்கலாம் என்றும் அறிவிப்புச் செய்தார்.        
அஜ்மீரிலிருந்து காஜா முஈனுத்தீன் சிஸ்தி ரஹ் அவர்கள் ஒரு குடியானவனுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக நடந்தே தில்லிக்கு வந்தார்கள். அவரை வாசலுக்கு வந்து வரவேற்ற இல்துமிஷ் இந்தக் காரியத்திற்கு சொல்லி அனுப்பியிருந்தால் போதுமே என்றார். அதற்குப் பிறகு சிஸ்தி ரஹ் அவர்களைப் பார்ப்பதற்கு தில்லியிலிருந்து இல்துமிஷே வந்து சென்றார். தில்லியை அரசாள்பவர்கள் அஜ்மீர் வந்து செல்லும் பழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இல்துமிஷ் ஆவார்.
மங்கோலியர்களின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் உலகமே அல்லலுற்றுக் கொண்டிருந்த சூழலில் இந்தியாவை பாதுகாத்தவர் இல்துமிஷ் என்று வரலாறு போற்றுகிறது.
தாத்தாரியர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல மார்க்க அறிஞர்களும் இந்தியாவிற்கு வருவதற்கு இல்துமிஷ் காரணமானார். பக்தாதிலிருந்து குத்புத்தீன் காக்கி ரஹ் அவர்கள் இந்தியா வந்ததும் இவரது காலத்தில் தான். குத்புத்தீன் காக்கி ரஹ் அவர்களின் வருகையின் ஞாபகார்த்தமாகத்தான் குதுப் மினாருக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
குத்புத்தீன் ஐபக் கட்டத் தொடங்கிய குதுப்மினாருக்கு மேல் மூன்று அடுக்குகளை இல்துமிஷ் கட்டி முடித்தார், அதன் பிறகு பெரோஸ் ஷா துக்ளக் குதுப் மினாரின் ஐந்தாவது அடுக்கை கட்டினார். பல சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட பூகம்பங்களைத் தாண்டி தற்போதும்  73 மீட்டர் உயரத்துடன் இந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகவும். ஸ்பெயினில் முஸ்லிம்கள் கட்டிய ஜாமி ஆ மஸ்ஜிதாக இருந்து இப்போது கத்தோலிக்க மணிக்க கூண்டாக மாறிய செல்வியா கோபுரத்திற்கு அடுத்த உயரமான பாங்கு மினாராவாகவும் குதுப்மினார் திகழ்கிறது.  
இல்துமிஷின் கல்லறை முன் நின்ற போது இத்தனை வரலாற்று நிகழ்வுகளும் நாபகத்திற்கு என்று சொல்ல மாட்டேன். ஒரு மகத்தான மனிதரின் அடக்கவிடத்தில் நிற்கிறோம் என்ற மரியாதை எழுந்ததை பல வருடங்களுக்கு பின்னாள் இப்போதும் என்னால் உணர முடிகிறது.
இன்று காலை தினசரி செய்தித்தாள் வருகை தாமதான நேரத்தில் செல்பிலிருந்த நூல்களை துளாவினேன். குவைத்திற்கு சென்றிருந்த போது அங்குள்ள அவ்காபிலிருந்து பெற்று வந்த சின்வானுல் கழா வ உண்வானுல் இப்தா என்ற நூல் கையில் கிடைத்தது. எடுத்து புரட்டினேன். ஹிஜ்ரீ 7 ம்நூற்றாண்டைச் சார்ந்த முஹம்மது அல் கதீப் அஷ்பூர்கானி எழுதிய இஸ்லாமிய நீதித்துறை சட்டங்கள் ஒழுங்குகளைப் பற்றி தொன்மையான நூல் அது. கதீப் அஷ்பூர்கானி தாத்தாரியர்களின் தாக்குதலிலிருந்து தப்பி மன்னர் இல்துமிஷிடம் வந்து சேர்ந்திருக்கிறார். இல்துமிஷிற்கு பிறகு அடிமை வம்சத்தின் 7 வது ஆட்சியாளரான அலாவுதீன் மஸ்வூத் ஷாஹ் அஷ்பூர்கானியை தில்லியின் தலைமை நீதிபதியாக நியமித்தார். அடிமை வம்ச 4 ஆட்சியாளர்களின் காலத்தில்  ஏழு ஆண்டுகள் ஐந்து நாட்கள் நீதிபதியாக பணியாற்றியவர் என்ற செய்தியை படித்த போது இந்த நினைவுகள் எல்லாம் எழுந்தன.  
தாமதமாக வந்த பேப்பர் காரணுக்கு நன்றி சொல்வதா? அல்லது தண்டனை கொடுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டியது இத்தனையையும் பெறுமையாக படித்த நீங்கள் தான்.
என்ன செய்யலாம்?

Friday, January 16, 2015

ஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள்தி ஹிந்துவில் கடந்த மாதத்தில் இரு கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லி அமைந்திருந்தது. அதற்கு எழுதிய கடிதம்.


தொடர்ந்து முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கும்அல்லது அவர்களை செதுக்க முயற்சிக்கும் கட்டுரைகளை இந்து வெளியிடுகிறது. ஒரு வகையில் மகிழ்ச்சியே!
அதே நேரத்தில், இந்த முட்டாள்கள் ஏன் இப்படி மற்றவர்களை அழித்து தாமும் அழிந்துபடுகிறார்கள் என்கிற கேள்வியை எத்தனை நாட்களுக்கு நாம் புறக்கணிக்க முடியும் என்பதையும் நாம் விவாதிக்க வேண்டும்!
நான் முஸ்லிமாக இருந்து கொண்டு இதை சொல்வதால் இது தீவிரவாதிகளுக்கு ஆதரவானது என அர்த்தப்படுத்தி விட வேண்டாம்.
சத்தியமாக இத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு ஆதாரவாக அல்ல, மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அக்கறையில் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.
பாதிப்புக்களை கண்டு கலங்கி நிற்கும் போதும், ஆறுதல் தெரிவிக்கிறபோதும் கூட நாம் உணர்ச்சிவசப்படலாம். அதற்கடுத்த கட்டத்திலாவது எதனால் இது நடந்தது, இதை தடுப்பதற்கான அறிவார்த்தமான வழி எது என்று யோசிக்கலாமே!
நம்மை அதீத புத்திசாலிகளாக,  அல்லது நாகரீகம் -,சுதந்திரத்தின் தளகர்த்தர்களாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் உலகை தொடர்ந்து ஆபத்தின் பிடிக்குள்அச்சத்தின் குகைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேககம் ஒரு வாசகனாக என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது,
அமெரிக்கா இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நாட்டாமை கால் வைக்கிற இடத்திலெல்லாம் தலைமுறைகளை தாண்டி கலகம் தொடர்கிறது. 
பிரான்ஸ் பத்ரிகையின் மீதான தாக்குதல்களை உலகமே கண்டித்து விட்டது. பத்ரிகையின் சுதந்திரம் பற்றிய பேச்சு இப்போது வேண்டாம். தாக்குதலை ஏற்க முடியாது என்று கண்டித்து விட்டோம். நூற்றுக் நூறு சரியான வாதம். ஆனால் மீண்டும் முஹம்மது நபியின் கேலிச்சித்திரம் வரையும் அப்பத்ரிகையின் தீர்மாணம் மன உறுதியை காட்டுகிறதா ? வெறுப்புணர்வை காட்டுகிறதா?
இது என்ன நியாயமான யோசனை ? கேலிச்சித்திரம் தீவிரவாதிகளைப் பற்றியல்லவா இருக்க வேண்டும்? கையில் துப்பாக்கி வைத்து முகமூடி அணிந்திருக்கிறவனை முஸ்லிமாக அடையாளப்படுத்து வதை நியாயம் என்றே நினைத்துக் கொள்ளுங்கள்.  வரலாற்றின் புனித பிம்பத்தை தொடர்ந்து  அவமதிக்கும் செயலை எப்படி சுதந்திரமாக மட்டுமே பார்க்க முடியும்?
உன் மனைவிய நிர்வானமாக படம் பிடிப்பது அவனவன்  உரிமை அதை நீ மறுக்கலாம் ஆனால் பொருத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சட்டம் சொல்லும் என்றால் முட்டாள்களின் எண்ணிக்கை பெருகாமல் என்ன செய்யும்?
பாகிஸ்தானின் குழந்தை படுகொலை நாம் பார்த்த கடைசி கோரமாக இருக்கட்டும் என்றே மனம் பிரார்த்தனை செய்கிறது. அதே நேரத்தில் தீவிர்வாதிகள் என்று  அடையாளப்படுத்தி, விஞ்ஞானத்தின் துணையை பயன்படுத்திக் கொண்டு, தமக்கு பாதிப்பில்லாத வகையில்  ஆளில்லா விமானங்கள் மூலம் திடீர் திடீர் என குண்டு வீசும் நியாயவான்கள் இந்த பிரார்த்தனையை தடுத்து அழித்து விடுவார்களோ என அச்சத்தின் எதார்த்ததை அறிவு ஜீவிகளாக நாம் எத்தனை நாளைக்கு ஒதுக்கி வைக்க முடியும்.
எதனால் இது ? என்ற கேள்வியை நாம் தொடர்ந்து புறக்கணிக்கிறோம் . அதனால் உலகம் மிக குரூரமாகி வருகிறது.
பெரும்பாலும் நமது விரல் ஒரு தரப்பை மட்டுமே சுட்டி நிற்கிறது. அதுவும் ஊமையாக்கப்பட்ட தரப்பை.
கொஞ்சம் சூழ்நிலை தணிந்ததும் எதனால் இது என்று கேள்விகளுக்குள் நாம் பயணிக்கவேண்டும். சரியான தீர்வுகளுக்காக மட்டுமல்ல உலகின் அமைதிக்கும் நாம் உண்மையாக யோசிக்க வேண்டும். 
கோவை அப்துல் அஜீஸ் பாகவி