Saturday, April 25, 2015

இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார்.



இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார்.
ஒரு ஷார்ட் விசிட்டாக தில்லி சென்ற சந்தர்ப்பத்தில் காலையிலிருந்து மதியம் வரை ஓய்வு கிடைத்தது. அப்போது தில்லியில் நான் சுற்றி பார்க்க நினைத்திருந்த பட்டியலில் குதுப்மினார் இருக்கவில்லை. ஒரு வரலாற்று மாணவனாக குதுப் மினாரைப் பற்றி படித்த தகவல்களோ இந்தியாவின் தொல்பொருள் சின்னங்களில் முக்கியமானது என்ற குறிப்போ என்னை ஈர்த்திருக்கவில்லை.  மன்னர்கள் தமது பெறுமைக்காக கட்டத் தொடங்கி முடிக்காமல் விட்ட ஒரு கோபுரம் என்ற அளவில் அது என்னிடம் ஈர்ப்பற்றிருந்தது.
அன்று அதிகாலையில் என் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போது குர் காவ்னிலிருந்து நான் செல்லும் வழியில் குதுப்மினார் இருந்தது. “குலா ரஹேதோ தேக்கேங்கே!” இந்த நேரத்தில் திறந்திருந்தால் பார்ப்போம் என டிரைவர் சொன்னார்.
திறந்திருந்தது.  
அதிக சிரத்தையில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொண்டு பெரிய அந்த பசுமையான வளாகத்திற்கு கிட்டத்தட்ட தனியாளாக உள்ளே நுழைந்த போது அந்த கம்பீரமும் ரம்மியமும் எனது அசிரத்தையை பறக்கடித்து விட்டது.  அது ஒரு பிரம்மாணடமான பள்ளிவாசல். அதன் ஒரு முனையில் செங்கள் கட்டிடமாக மிக கவுரமாக உயர்ந்து நின்றது குதுப்மினார். பக்கத்திலே பாதி சிதைந்த நிலையிலிருந்த வளைவுகள். தொன்மையின் ஆகர்ஷணம் என்பதை அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த கணம் அது. இனி இதற்குப் பின்னால் தில்லியில் எதையும் பார்க்கத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.
தற்போதுதான் அந்த உண்மையை படித்தேன் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தளம் தாஜ்மஹால் அல்ல; குதுப்மினார் தான்.
Qutab Minar is the favourite destination of tourists. It is India's most visited monument
2006 ம் ஆண்டு தாஜ் மஹாலை சுற்றிப்பார்த்தவர்களின் எண்ணிக்கை 25 இலட்சம். அதே வருடம் குதுப்மினாருக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 39 இலட்சம் என விக்கீபீடியா தெரிவிக்கிறது.
இனம் புரியாத பரவசத்தோடு சுற்றி வருகையில் அங்கிருந்த சிதிலமடைந்த நிலையிலும் கம்பீரமாக இருந்த ஒரு மஜார் (அடக்கஸ்தலத்திற்குள்) நுழைந்தேன்  பெரும்பாலும் ஓரிடத்திற்கு செல்வதற்கு முன் அதைப்பற்றி படித்து விட்டு செல்கிற நான் குதுப்மினார் வளாகத்தததைப் பற்றி படிக்காமல் சென்றதால் அங்கு மேலும் ஒரு அனுபவம் காத்திருந்தது, உள்ளே இருந்த அடக்கஸ்தலங்களில் ஒன்று இல்துமிஷினுடையது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னாள் தில்லியை மையமாக கொண்டு ஸ்திரமான மகிமை மிக்க ஆட்சியை நடத்திய பெருந்தகை. வரலாற்றின் கம்பீரமான பக்கங்களுக்குள் புதைந்துகிடந்த அந்த மாமனிதனின் புதைகுழிக் கருகே நிற்கிறோம் என்பது ஒரு சிலிர்ப்பை தந்தத்து. வரலாறு என் கண் முன் விரிந்தது.  
சிந்துப் பகுதியில் இஸ்லாமிய ஆட்சிக்கு வித்திட்ட முஹம்மது பின் காஸீம் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்.
அடுத்ததாக இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய மஹ்மூது கஜ்னவி இங்கு ஒரு அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
அதற்கடுத்து இந்தியா மீது படை எடுத்து வந்த சகரவர்த்தி முஹம்மது அல்கோர் (கோரி முஹம்மது) இங்கு ஒரு அரசை அமைத்து அதை கவனிக்கும் பொறுப்பை தன்னுடைய அடிமையும் நம்பிக்கைகுரிய படைத்தளபதியுமாக இருந்த குத்புத்தீன் ஐபெக்கிடம் கொடுத்தார். குத்புத்தீன் ஐய்பக் தான் இந்தியாவில் இரண்டாம் கட்ட முஸ்லிம் ஆட்சியை லாகூரை தலைமையாக கொண்டு தொடங்கியவர் ஆவார்.  தில்லி அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. குதுப்மினார் வளாகத்தில் உள்ள குவ்வத்துல் இஸ்லாம் பள்ளிவாசலை கட்டியவர் இவர்தான். குதுப்மினாரின் ஆரம்ப இரண்டு அடுக்குகளை கட்டிவரும் இவர் தான். பள்ளிவாசலுக்கான பாங்கு மினாராவாகவும் அதே நேரம் இந்தியாவில் முஸ்லிம்களின் அரசின் தொடங்கியதற்கு அடையாளமாகவும் பிரம்மாண்டமாக சிவப்பு செங்கற்களால அந்த கோபுரத்தை கட்டினார். அதை கட்டி முடிப்பதற்கு இறந்து போனார்.
குத்புதீன் ஐபக் தனது அடிமையாக இருந்த ஷம்சுத்தீன் இல்துமிசை விடுதலை செய்து அவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். நான்கு வருட ஆட்சிக்குப் பிறகு குத்புத்தீன் ஐபெக் இறந்த போது  போது இல்துமிஷ் தில்லியை மையமாக கொண்ட உறுதியான மகோன்னதமான தனி அரசை நிறுவினார். தனது ஆட்சிப்பகுதிக்குள் எந்த ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதற்கென சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மக்கள் அரசரை சந்திக்க தாமதமாகக்கூடும் என்று கருதிய அவர் அநீதிக்குள்ளானவர்கள் முறையிட ஒரு புதுவகையான ஏற்பாட்டை செய்தார், அநீதிக்குள்ளானவர்கள் அந்த ஜாமியா பள்ளிவாசலுக்குமுன் தொழுகைக்குப் பின் தில்லிவாசிகள் வழக்கமாக ஆடைக்கு மாற்றமாக ஒரு ஆடை அணிந்து வந்தால் போதுமானது, அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தார். தனது வீட்டுக்கு வெளியே நீண்ட சங்கிலியில் மணியை கட்டிவைத்து அநீதியிழைக்கப்பட்டோர் மணியோசையை எழுப்பி தனது உறக்கத்தை கலைக்கலாம் என்றும் அறிவிப்புச் செய்தார்.        
அஜ்மீரிலிருந்து காஜா முஈனுத்தீன் சிஸ்தி ரஹ் அவர்கள் ஒரு குடியானவனுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக நடந்தே தில்லிக்கு வந்தார்கள். அவரை வாசலுக்கு வந்து வரவேற்ற இல்துமிஷ் இந்தக் காரியத்திற்கு சொல்லி அனுப்பியிருந்தால் போதுமே என்றார். அதற்குப் பிறகு சிஸ்தி ரஹ் அவர்களைப் பார்ப்பதற்கு தில்லியிலிருந்து இல்துமிஷே வந்து சென்றார். தில்லியை அரசாள்பவர்கள் அஜ்மீர் வந்து செல்லும் பழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இல்துமிஷ் ஆவார்.
மங்கோலியர்களின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் உலகமே அல்லலுற்றுக் கொண்டிருந்த சூழலில் இந்தியாவை பாதுகாத்தவர் இல்துமிஷ் என்று வரலாறு போற்றுகிறது.
தாத்தாரியர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல மார்க்க அறிஞர்களும் இந்தியாவிற்கு வருவதற்கு இல்துமிஷ் காரணமானார். பக்தாதிலிருந்து குத்புத்தீன் காக்கி ரஹ் அவர்கள் இந்தியா வந்ததும் இவரது காலத்தில் தான். குத்புத்தீன் காக்கி ரஹ் அவர்களின் வருகையின் ஞாபகார்த்தமாகத்தான் குதுப் மினாருக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
குத்புத்தீன் ஐபக் கட்டத் தொடங்கிய குதுப்மினாருக்கு மேல் மூன்று அடுக்குகளை இல்துமிஷ் கட்டி முடித்தார், அதன் பிறகு பெரோஸ் ஷா துக்ளக் குதுப் மினாரின் ஐந்தாவது அடுக்கை கட்டினார். பல சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட பூகம்பங்களைத் தாண்டி தற்போதும்  73 மீட்டர் உயரத்துடன் இந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகவும். ஸ்பெயினில் முஸ்லிம்கள் கட்டிய ஜாமி ஆ மஸ்ஜிதாக இருந்து இப்போது கத்தோலிக்க மணிக்க கூண்டாக மாறிய செல்வியா கோபுரத்திற்கு அடுத்த உயரமான பாங்கு மினாராவாகவும் குதுப்மினார் திகழ்கிறது.  
இல்துமிஷின் கல்லறை முன் நின்ற போது இத்தனை வரலாற்று நிகழ்வுகளும் நாபகத்திற்கு என்று சொல்ல மாட்டேன். ஒரு மகத்தான மனிதரின் அடக்கவிடத்தில் நிற்கிறோம் என்ற மரியாதை எழுந்ததை பல வருடங்களுக்கு பின்னாள் இப்போதும் என்னால் உணர முடிகிறது.
இன்று காலை தினசரி செய்தித்தாள் வருகை தாமதான நேரத்தில் செல்பிலிருந்த நூல்களை துளாவினேன். குவைத்திற்கு சென்றிருந்த போது அங்குள்ள அவ்காபிலிருந்து பெற்று வந்த சின்வானுல் கழா வ உண்வானுல் இப்தா என்ற நூல் கையில் கிடைத்தது. எடுத்து புரட்டினேன். ஹிஜ்ரீ 7 ம்நூற்றாண்டைச் சார்ந்த முஹம்மது அல் கதீப் அஷ்பூர்கானி எழுதிய இஸ்லாமிய நீதித்துறை சட்டங்கள் ஒழுங்குகளைப் பற்றி தொன்மையான நூல் அது. கதீப் அஷ்பூர்கானி தாத்தாரியர்களின் தாக்குதலிலிருந்து தப்பி மன்னர் இல்துமிஷிடம் வந்து சேர்ந்திருக்கிறார். இல்துமிஷிற்கு பிறகு அடிமை வம்சத்தின் 7 வது ஆட்சியாளரான அலாவுதீன் மஸ்வூத் ஷாஹ் அஷ்பூர்கானியை தில்லியின் தலைமை நீதிபதியாக நியமித்தார். அடிமை வம்ச 4 ஆட்சியாளர்களின் காலத்தில்  ஏழு ஆண்டுகள் ஐந்து நாட்கள் நீதிபதியாக பணியாற்றியவர் என்ற செய்தியை படித்த போது இந்த நினைவுகள் எல்லாம் எழுந்தன.  
தாமதமாக வந்த பேப்பர் காரணுக்கு நன்றி சொல்வதா? அல்லது தண்டனை கொடுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டியது இத்தனையையும் பெறுமையாக படித்த நீங்கள் தான்.
என்ன செய்யலாம்?